சிரியாவில் ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் படை சரமாரி தாக்குதல்

சிரிய இராணுவம் ஏவுகணைகளை இடைமறிப்பு

சிரியாவில் ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஞாயிறு இரவு தாக்குதல் நடத்தியிருப்பதோடு, விரோத இலக்குகளை சுட்டு வீழ்த்தியதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது இஸ்ரேலின் 30க்கும் அதிகமான குரூஸ் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சிரிய இராணுவ வான் பாதுகாப்பு அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தை மேற்கோள்காட்டி இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதில் தென்கிழக்கு டமஸ்கஸில் விமானநிலையம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் நான்கு சிரிய படையினர் கொல்லப்பட்டிருப்பதோடு ஆறுவர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்த தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பாகம் குறிப்பிட்டுள்ளது.

“சிரிய நிலப்பகுதியில் இருந்து ஈரானிய குத்ஸ் இலக்குகள் மீது நாம் தாக்குதல் நடத்த அரம்பித்தோம். இஸ்ரேலிய படையினர் அல்லது அதன் ஆட்புலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் சிரிய இராணுவப்படையை நாம் எச்சரிக்கிறோம்” என்று இஸ்ரேலிய இராணுவம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குத்ஸ் படை, ஈரானிய புரட்சிப்படையின் வெளிநாட்டு நடவடிக்கைக்கு பொறுப்பாக உள்ளது. சிரியாவில் நீண்ட காலம் நீடித்து வரும் உள்நாட்டு யுத்தத்தில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு ஆதரவு வழங்கும் பிரதான தரப்பாக ஈரான் உள்ளது.

இந்நிலையில் சிரியாவில் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டிருக்கும் சூழலில் இந்த நடவடிக்கை வழக்கத்திற்கு மாறாக இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை சிரியாவில் தாங்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து மிகவும் ஆபூர்வமாகவே இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரிய தலைநகர் டமஸ்கஸின் இரவு வான் எங்கும் பெரும் சத்தங்களுடன் வெடிப்புகள் நிகழ்ந்ததாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இன்னமும் முழுமையாக தெரியவில்லை.

தலைநகருக்கு அருகில் ஏவுணைகள் இடைமறிக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சிரிய இராணுவ வான் பாதுகாப்பு, ‘விரோத இலக்குகள்’ முறியடிக்கப்பட்டு, பலதும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று சிரிய அரச செய்தி நிறுவனமான சானா குறிப்பிட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல்களை அடுத்தே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. எல்லையில் இஸ்ரேலின் வான் நடவடிக்கையை முறியடித்ததாக சிரியா குறிப்பிட்டிருந்தது.

எனினும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதியில் இருந்து வந்த ரொக்கெட் குண்டுகளை இடைமறித்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டிருந்தது. எனினும் எங்கிருந்து அந்த ரொக்கெட் விசப்பட்டது என்பதை இஸ்ரேலிய அறிவிப்பில் விளக்கப்படவில்லை. வடக்கு கோலன் குன்று பகுதி லெபனான் நாட்டுக்கும் நெருக்கமாக உள்ளது.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமையன்று சாட் நாட்டுக்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஓர் எச்சரிக்கை விடுத்தார்.

“சிரியாவில் மூர்க்கத்தனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஈரான் குழு இலக்காகக் கொள்ளவும், எங்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எவரையும் அழித்திடும் பணியில் ஈடுபடவும் நாங்கள் கொள்கை வகுத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை