எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாகட்டும்

பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

 "தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை கைகூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பொங்கல் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தமது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை அளித்துள்ளனர் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. கமத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையையே அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதையும் இது புலப்படுத்துகின்றது.

அத்தோடு வாழ்வின் ஆதாரமான விவசாயத்திற்கு நீர், ஒளி, வெப்பம், காற்று ஆகியவற்றை உருவாக்க உதவிவரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் பண்டுதொட்டு கொண்டாடிவரும் தைப்பொங்கல் தினத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பால் பொங்கி வழிவதைப் போல் அனைவரது உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகிப் பிரவாகித்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே தமிழ் மக்கள், தமது விளைச்சலினால் பெற்றுக்கொண்ட புத்தரிசி மற்றும் தானியங்களோடு தூய பாலும் சர்க்கரையும் கலந்து பொங்கி மகிழ்கின்றனர். பல இன, மத, கலாசார சமூகத்தைக் கொண்ட எமது நாட்டின் கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு இத்தகைய பண்டிகைகள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்பதே எனது நம்பிக்கையாகும்.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான வலிமையான உறவினை மென்மேலும் மெருகூட்டும் வகையிலும் தமிழ் கலை, கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் தைத்திருநாளைக் கொண்டாடி மகிழும் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை