உதைபந்தாட்ட வாழ்க்கைக்கு ​விடைகொடுத்த உசேன் போல்ட்

மெய்வல்லுனர் அரங்கில் மகத்தான சாதனைகள் பல படைத்த ஜமைக்காவின் உசேன் போல்ட், தனது விளையாட்டுத்துறை வாழ்க்கைக்கு விடைகொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

32 வயதான போல்ட், மெய்வல்லுனர் அரங்கில் 100 மீற்றர், 200 மீற்றர், 4X100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியனாக முத்திரை பதித்தவர். இவர் சர்வதேச மெய்வல்லுனர் அரங்கில் இருந்து 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு கால்பந்து விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தியிருந்தார். 

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர்ஸ் கழக அணிக்காக ஏ டிவிஷன் லீக் போட்டிகளில் விளையாட அவர் கடந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, சுமார் 2 மாதங்கள் பயிற்சிகளிலும் ஈடுபட்டு ஓரிரண்டு போட்டிகளிலும் விளையாடினார். அவர், உரிய அனுசரணையாளர்கள் கிடைக்காத காரணத்தால் கடந்த நவம்பர் மாதம் அந்த கழகத்திலிருந்து விலகிச் சென்றார்.

இந்நிலையில், கால்பந்தாட்ட வீரராகுவதற்கு தான் கண்ட கனவை தற்போது மூட்டை கட்டி விட்டு வியாபாரத் துறையில் கவனம் செலுத்தவுள்ளதாக போல்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜமைக்காவின் ஊடக வட்டாரங்கள் பலவிதமாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. 8 ஒலிம்பிக் தங்கம் வென்ற உசேன் போல்ட் கடந்த மாதம் கூட கால்பந்தாட்ட வீரனாகும் தன் நம்பிக்கை இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது என்றார். 

ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன் பிபிசி மற்றும் ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில், சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர்ஸ் கழக உடன்படிக்கைக்கான செயற்பாடுகள் சரியான முறையில் கையாளப்படவில்லை என்று நான் கூற விரும்பவில்லை. ஆனால், அந்த இலட்சியத்தை நோக்கி எந்த வழியில் செல்லக் கூடாதோ அப்படிச் சென்றதாக உணர்கிறேன். நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதனை வாழ்ந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

உண்மையில் கால்பந்து ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஒரு கால்பந்து அணிக்காக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. இது நிச்சயம் மெய்வல்லுனரை விட பெரிய வித்தியாசம் கொண்டது என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் அங்கிருந்த வரை சந்தோஷமாகவும், கேளிக்கையாகவும் இருந்தது. என் விளையாட்டு வாழ்க்கை முடிந்து விட்டது, வியாபாரத் துறையில் இறங்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். என்னிடம் பல திட்டங்கள் உள்ளன. எல்லாவற்றிலும் ஈடுபடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். இப்போது தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற இலட்சியம் வந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மெக்காத்தர் சவுத் வெஸ்ட் கழகத்துக்கு எதிராக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் மெரைனர்ஸ் கழகத்துக்காக முதல்தடவையாக களமிறங்கிய உசேன் போல்ட், இரண்டு கோல்களைப் போட்டு அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 01/28/2019 - 14:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை