கண்டியில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ

3 பிள்ளைகள், மனைவியை கீழே வீசிவிட்டு தானும் குதித்து உயிர்தப்பிய தந்தையின் துணிகரம்

பதற்றம், பரபரப்பு!

கண்டி, யட்டிநுவர வீதியிலுள்ள ஐந்து மாடிக் கட்டடம் நேற்றுக் காலை திடீரென தீப்பற்றி எரிந்ததில் மாடியின் மேலே குடியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் 4 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். தனது மூன்று பிள்ளைகளையும் கட்டடத்தின் ஜன்னலுக்கூடாக வீசியெறிந்த பின்னர் கணவனும் மனைவியும் ஜன்னலுக்கூடாகவே கீழே குதித்து உயிர் தப்பிய மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி அப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவம் நேற்றுக் காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிசாம் சொப்பிங் கொம்ப்ளெக்ஸ் வர்த்தக கட்டடத் தொகுதியில் றோயல் ஜூவலரி மார்ட் எனும் நகைக்கடையிலேயே இத் தீ விபத்து இடம்பெற்றதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டடத்தின் மூன்றாம் மாடியில் ஏற்பட்ட தீ நான்காம் மாடிக்கு பரவியது. இதனால் ஐந்தாம் மாடியில் குடியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் மூன்று ஆண் பிள்ளைகளும் கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ளனர்.

தனது மூன்று மகன்களையும் ஜன்னலுக்கூடாக கீழே வீசி எறிந்த தந்தை, பின்னர் அவர் கீழே குதித்து கட்டிடத்தை பிடித்து தொங்கியபடி மனைவியையும் குதிக்குமாறு கூறினார். குதிப்பதற்கு தயாராகியும் தயக்கத்துடன் இரண்டு தடவை மீண்டும் மாடிக்கு சென்ற ம​னைவி, இறுதியில் கீழே பாய்ந்தார். கட்டடத்தில் தொங்கியபடி மனைவியைப் பற்றிப் பிடித்த கணவன், அவரை கீழே எறிந்துவிட்டு தானும் கீழே குதித்தார். இவர்கள் சிறு சிறு சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானார்கள்.

இவர்கள் 5 பேரும் சுமார் 30 நிமிடத்துள் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இராமநாதன் ராமராஜா (36), தங்கவேலு ராதிகா (32), நிசாலன் (8), சத்தியஜித் (7) மற்றும் சஹித்தியன் (3 1/2) ஆகியோரே வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவர்கள் அனைவரும் சுகதேகியாக இருப்பதாகவும் பிள்ளைகளிடம் உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதால், எற்பட்ட அதிர்ச்சியும் அச்சமுமே காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தீ விபத்து தொடர்பில் தீயணைக்கும் படையினருக்கு அறிவிக்கப்பட்டபோதும் அவர்கள் தாமதமாகவே சம்பவ இடத்தை வந்தடைந்ததாக பொலிஸாரும் பொதுமக்களும் தெரிவித்தனர். அங்கே கூடியிருந்த ஊர் மக்களே கீழே குதித்தவர்களைக் காப்பாற்ற உதவி செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் களத்திலிருந்த பொலிஸாரை கேட்டபோது காலை 7.10 மணியளவிலேயே தீயணைக்கும் வண்டி சம்பவ இடத்தை வந்தடைந்ததாகக் கூறினர். இது தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆர். எம் அபயகோன் பண்டாரவை தொடர்பு கொண்டபோது, தீயணைப்பு படையினர் சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாகவும் எவ்வாறாயினும் குறிப்பிட்ட இடத்தை அவர்கள் வந்தடைவதற்கு முன்னர் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே அந்தக் குடும்பத்தினர் கீழே குதித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எனினும், கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார தெரிவிக்கையில், குடும்பத்தினர் ஜன்னலுக்கூடாக பாயும்போது தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கீழே நின்று உதவியதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கண்டி தீயணைப்புப் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தியபோது அவர்கள் சரியான பதிலை வழங்காமல் தொலைபேசியைத் துண்டித்தனர்.

சம்பவத்தில் மூன்றாம் நான்காம் மாடிகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

நேற்றுக் காலை இடம்பெற்ற இச் சம்பவத்தால் அப்பகுதியெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் யட்டிநுவர, கொழும்பு மற்றும் தலதா வீதிகளில் போக்குவரத்து நெரிசலும் இடம்பெற்றது. சில வீதிகளில் வாகன போக்குவரத்தும் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால், மாணவர்களும் அலுவலக பயணிகளும் அசெளகரியங்குக்கு முகம் கொடுத்தனர்.

கண்டி தீயணைக்கும் படை சுமார் இரண்டு மணி நேரம் கடும் பிரயத்தனத்துக்குப் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் சில மணி நேரம் அப்பகுதியெங்கும் புகை மண்டலமாக காணப்பட்டது.

பிள்ளைகளையும் மனைவியையும் உயிருடன் காப்பாற்றுவதற்காக அந்தத் துணிச்சல் மிகு தந்தை மேற்கொண்ட செயலைப் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

லக்ஷ்மி பரசுராமன்

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை