உண்மையைக் கண்டறிய ஜப்பானிலிருந்து உயர்மட்டக்குழு இலங்கை விரைவு

மின்னுயர்த்தியில் இளைஞன் பலி;

கொழும்பில் மின்னுயர்த்தி உடைந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் குறித்து ஆராய்வதற்கென, மின்னுயர்த்தி நிறுவனத்தின் நிபுணர் குழு ஜப்பானிலிருந்து இலங்கை வரவுள்ளது.

மிட்சுபிஸி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மின்னுயர்த்தி, பயன்பாட்டின்போது உடைந்து விழுந்த முதல் சம்பவம் இதுவென்பதால், அதுபற்றி தீர ஆராய்வதற்காக அந் நிறுவனத்தின் நிபுணர்கள் இன்னும் சில தினங்களில் கொழும்பு வரவுள்ளதாக, சம்பவம் இடம்பெற்ற கட்டடத்தின் பணிப்பாளர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கொழும்பு நவம் மாவத்தையில் உள்ள கிறீன்லங்கா கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் அமைந்துள்ள இரவு விடுதிக்குச் செல்வதற்காக, கடந்த சனிக்கிழமை அதிகாலை அக்கட்டடத்தின் கீழ்த்தளத்திலிருந்து சில இளைஞர்கள் மின்னுயர்த்தி மூலம் சென்றுள்ளனர். அப்போது மின்னுயர்த்தியில் அளவிற்கு அதிகமானோர் உள் நுழைந்தால், மின்னுயர்த்தி பாரம் தாளாது உடைந்து நிலத்தளத்திற்குச் சென்றுள்ளது. அந்த வேளையில், ஓர் இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.மேலும் இருவர் காயத்திற்கு உள்ளாகினர்.

உயிரிழந்த இளைஞரின் உடல் சரிந்து கிடந்துள்ளதுடன், அவரின் கால்கள் இரண்டும் மின்னுயர்த்தியில் சிக்கிக்கிடந்தன. இஃது எவ்வாறு நடந்தது என்பதை அனுமானிக்க முடியாதுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான விபத்து ஏற்பட்டதில்லை. எனவே, இந்தச் சம்பவம் குறித்து ஆராய்வதற்கு ஜப்பானிலிருந்து மிட்சுபிஸி நிறுவனத்தின் உயர்மட்ட குழுவொன்று சில தினங்களில் கொழும்பு வரவுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளரான சிறில் நவரட்ன பெர்னாண்டோ தினகரனுக்குத் தெரிவித்தார். எனினும், இந்தச் சம்பவம் பற்றி அறிக்கையிட்ட ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளிட்டிருப்பதாக அவர் கவலை தெரிவித்தார். மின்னுயர்த்தியில் சென்றபோது மின்சாரம் தடைப்பட்டதால், அது இடைநடுவில் நின்று விட்டதாகவும், பின்னர் இளைஞர்கள் வெளியில் செல்ல முயன்றுகொண்டிருந்தபோது மின்சாரம் மீண்டும் வந்து, மின்னுயர்த்தியை மீண்டும் நிலத்தளத்திற்கு இழுத்துச் சென்றதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், அவ்வாறு எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை என்று திரு.பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். அதிக பாரம் தாளாமலேயே மின்னுயர்த்தி உடைந்திருப்பதாகக் கூறிய அவர், அதுவும் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை ஆராய்ந்த பின்னரே நிலைவரத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். (வி)

போல் வில்சன்

 

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை