இஸ்லாத்தை துறந்த சவூதி யுவதி தஞ்சக் கோரிக்கை

தனது குடும்பத்திடம் இருந்து தப்பி வந்து பாங்கொக் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சவூதி அரேபிய பெண் அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் பராமரிப்பின் கீழ் விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

18 வயதான அந்த யுவதியை நாடு கடத்தாதது குறித்து தாய்லாந்து அதிகாரிகளுக்கு ஐ.நாவின் அகதிகள் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

ரஹாப் முஹமது அல் குனூன் என்ற அந்த யுவதி பாங்கொக்கில் இருந்து குவைட்டை நோக்கி புறப்படும் விமானத்தில் பயணிக்க மறுத்து கடந்த திங்கட்கிழமை விமானநிலைய அறைக்குள் தம்மை பூட்டிக்கொண்டார்.

தான் இஸ்லாத்தை துறந்ததால் குடும்பத்தினரால் கொல்லப்படுவேன் என்று அவர் அச்சம் வெளியிட்டிருந்தார்.

விசுவாச துரோகம் என அறியப்படும் இஸ்லாத்தை துறப்பது சவூதியில் மரண தண்டனைக்குரியதாகும்.

குனூனியின் குடும்பத்தினர் இருக்கும் குவைட்டுக்கு அவர் திரும்பிச் செல்ல வேண்டும் என்று தாய்லாந்து அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அவர் தஞ்சம் கோரி இருப்பதாகவும் அந்த செயல்முறைக்கு பால தினங்கள் எடுத்துக் கொள்ளும் என்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தனது மகளை சந்திப்பதற்கு அந்த யுவதியின் தந்தை பாங்கொக் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

“ரஹாபுடன் பேச்சுவார்த்தை நடத்த அவரது தந்தை மற்றும் சகோதரர் விரும்புகின்றனர். எனினும் அதற்கு ஐ.நாவின் அனுமதி தேவைப்படுகிறது” என்று தாய்லாந்து குடிவரவு தலைவர் சுராச்சட் ஹக்மான் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ரஹாப் வெளியிட்ட ஒரு ட்விட்டர் செய்தியில், “என்னை அழைத்துப் போக என் தந்தை வந்திருக்கிறார். இது எனக்கு கவலை அளிக்கிறது. ஆனால் ஐ.நா முகாமையின் பாதுகாப்பில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன். மேலும் எனது கடவுச்சீட்டை திரும்பப் பெற்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை