ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் புதிய உத்தி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான புதிய உத்தி குறித்துக் கலந்துபேச, பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

தம் மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தில் அவர் மேலும் தீவிரமாகச் செயல்படுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சுகளில் கவனம் செலுத்த, அடுத்த வாரம் நடைபெறவிருக்கும், உலகப் பொருளியல் கருத்தரங்கில் மே கலந்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த மற்றொரு திட்டத்துக்கு, பிரிட்டிஷ் பாராளுமன்றம் இன்னும் சுமார் 10 நாட்களில் வாக்களிக்கும்.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு மாற்றாக, புதிய ஒப்பந்த சட்டமூலம் வரும் 21ஆம் திகதி தாக்கல் செய்வதாக எம்.பிக்களிடம் பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

மேலும், பிரெக்சிட் நடவடிக்கைகளை சுமுகமாக நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கும்படி எம்.பிக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெகசிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பின்னர் பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் பின்பற்ற வேண்டிய வர்த்தக விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து, தெரேசா மே அமைச்சரவையைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் பதவி விலகினர்.

இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது.

இது போன்ற வேண்டுகோளை 170 முன்னணி தொழில் அதிபர்களும் பிரதமர் தெரேசா மே மற்றும் தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கொர்பின் முன் வைத்துள்ளனர்.

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை