புளு ஸ்டார் அணி மீதான தாக்குதல்: கிறிஸ்டல் பெலஸ் அணிக்கு தண்டனை

புளு ஸ்டார் விளையாட்டுக் கழக வீரர்கள் ரசிகர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் மற்றும் அதன் செயலாளருக்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தடைகள் மற்றும் அபராதங்களை விதித்துள்ளது.

டயலொக் சம்பியஸ் லீக் தொடருக்காக கடந்த ஜனவரி 9ஆம் திகதி 9ஆவது வாரத்திற்காக நாவலப்பிட்டி ஜயதிலக்க அரங்கில் கிறிஸ்டல் பெலஸ் மற்றும் புளு ஸ்டார் அணிகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

வருகை அணியான புளு ஸ்டார் 1–0 என வெற்றி பெற்றதன் பின், புளு ஸ்டார் வீரர்கள ரசிகர்களால் தாக்கப்பட்டார்கள். அப்போது அரங்கில் எந்த ஒரு பாதுகாப்பு முன்னேற்பாடுகளோ, பொலிஸ் பாதுகாப்போ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு, கிறிஸ்டல் பெலஸ் செயலாளர் எம்.என். நாஸருக்கு மூன்று போட்டிகளில் தடை விதித்த இலங்கை கால்பந்து சம்மேளனம், பார்வையாளர்களின் வன்முறையை தடுப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடையும் செய்யத் தவறிய அந்தக் கழகத்திற்கு 25,000 ரூபா அபராதம் விதித்தது.

மேலும், கிறிஸ்டல் பெலஸின் மூன்று சொந்த மைதான போட்டிகளை நடத்துவதற்கு ஜயதிலக்க மைதானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அந்தக் கழகத்தினால் மேன்முறையீடு ஒன்று செய்யப்பட்டதை அடுத்து, கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம் எதிர் ஜவா லேன் விளையாட்டுக் கழக அணிகளுக்கு இடையிலான கிறிஸ்டல் பெலஸின் சொந்த மைதானத்திற்கான போட்டியை ஜயதிலக்க அரங்கில், நுழைவாயில்கள் மூடப்பட்ட நிலையில் நடத்துதற்கு (பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை) இலங்கை கால்பந்து சம்மேளனம் அனுமதி அளித்தது.

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை