அல் அக்ஸா வளாகத்திற்குள் இஸ்ரேல் பொலிஸ் முற்றுகை

இஸ்ரேலிய பொலிஸாரின் ஒரு மணி நேர முற்றுகைக்குப் பின் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் அல் அக்ஸாவின் டோம் ஒப்தி ரொக் பள்ளிவாசல் முஸ்லிம் வழிபாட்டாளர்களுக்கு கடந்த திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிவாசலின் மூன்று காவலர்கள் உட்பட ஐந்து பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக அனடொலு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பழைய நகரின் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இருக்கும் டோம் ஒப்தி ரொக்கை இஸ்ரேல் பொலிஸ் முற்றுகையிட்டது பலஸ்தீன வழிபாட்டாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

இஸ்ரேலிய பொலிஸார் அனுமதி இன்றி இந்த தலத்திற்குள் நுழைய முயன்றபோது பள்ளிவாசல் காவலர்கள் தடுத்ததை அடுத்தே இந்தப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

“பொலிஸாரிடம் தமது (யூத) தொப்பியை அகற்றிக்கொண்டு பள்ளிவாசலுக்குள் நுழையும்படி காவலர்கள் கேட்டுக்கொண்டதை மறுத்த பொலிஸார் உள்ளே நுழைய முற்பட்டனர்” என்று ஜெரூசலத்தின் மத அறக்கட்டளை நிர்வாகத்தின் பேச்சாளர் பிராஸ் அல் டிப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் அல்லாதோருக்கு அல் அக்ஸா வளாகத்திற்குள் நுழைய குறித்த நேரத்தில் அனுமதி அளிக்கப்படுகின்றபோது அங்கு வழிபாடு நடத்த தடை உள்ளது.

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை