தொலைந்து போகாத தேசத்தை கட்டியெழுப்பும் கட்டளை எம்மீது சுமத்தப்பட்டுள்ளது

தொலைந்து போகக் கூடாத ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் கட்டளை எம்மீது உள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக் கூடிய நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவம் வகிக்கும் ஒருவராக ஜனாதிபதி திகழ்கின்றார். அவர் கட்சித் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நிகழ்வில் உரையாற்றும் போதே வடக்கு ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்ததாவது:

சிதைந்து போயுள்ள ஒரு தேசத்தின் அழிவுகளிலிருந்து அதனை மீளப் பெற வேண்டிய ஒரு கட்டாய கால கட்டத்தில் நாம் உள்ளோம்.

பெற்றுக் கொள்ள வேண்டிய பலவற்றில் நாம் இழந்துவிட்ட கலாசாரத்தை மீளப் பெறுவதும் முக்கியமானதாகும்.

தமிழ் மக்கள் என்ற வகையில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை திருமறையும், திருக்குறளும் தெளிவாகக் கூறியிருக்கின்றன. அதனால் நாம் வாழ வேண்டிய இடத்தில் வாழ வேண்டுமென்ற கட்டாயம் இருக்கின்றது.

ஜனாதிபதியின் சிந்தனையில் இலங்கையைப் போதையற்ற ஒரு நாடாக கட்டியெழுப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த சிறந்த முக்கிய கொள்கைக்காக நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்த நிகழ்வை முல்லைத்தீவிலிருந்து ஆரம்பிப்பது தமிழர்களாகிய எமக்கு வழங்கப்படும் கௌரவமாகும். ஒரு புறம் முஸ்லிம் ஒருவரையும் இங்கு தமிழரையும் வைத்துக் கொண்டு ஜனாதிபதியவர்கள் சொல்ல வேண்டிய ஒன்றைச் சொல்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

போதையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் விடயமாக மட்டுமல்லாமல் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொலைந்து போகாத, தொலையக் கூடாத ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் கட்டளை எங்கள் மீது உள்ளது என்றே குறிப்பிட வேண்டும். உங்கள் செயலணியில் இணைவதற்கு முன் நானும் மது அருந்துபவனாகவே இருந்தேன்.

தற்போது அனைவருக்கும் முன் மாதிரியாக நான் அதை முழுமையாகக் கைவிட்டு விட்டேன். எனது அலுவலகத்தில் இடம்பெறும் எந்த நிகழ்வுகளிலும் மது மற்றும் புகைத்தல் வைக்கப்படக் கூடாது என்ற உத்தரவை அதிகாரிகளுக்கு நான் வழங்கியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை