ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினைக்கு மலையக அரசியல் இடைவெளியே காரணம்

இன்றைய நிலையில் மலையகத்தின் பிரதான அரசியல் பேசுபொருளாகியிருப்பது ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளவிவகாரம்.இது தவிர இன்னும் பல அடிப்படை அரசியல் பிரச்சினைகள் உண்டு. அவற்றுக்கு தீர்வுகாண சமகால மலையக அரசியல் செயற்பாடுகளுக்கும் மலையகத்தின் கல்விசார் சமூகத்துக்கும் இடையிலான இடைவெளி பிரதான காரணமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தேயிலை வருகையின் 150ஆண்டு கால வரலாற்றில் அதுசார்ந்த மக்கள் சமூகத்தின் பக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தொகுக்கப்பட்ட “இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்ட சமூகம்”  நூலின் பிரதிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு கொள்வனவு செய்து பாடசாலை மற்றும் பொது நூலகங்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் ஹட்டன் பூல்பேங்க் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சரின் ஆலோசகர் எம்.வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கலாநிதி.பொ.சுரேஷ், நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவரான பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி.இரா.ரமேஷ், கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் அகிலன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று (21) தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்கவேண்டும் என்பது கூட தமிழர்களால் மட்டுமே நடாத்தப்படும் போராட்டமாக அமைவது கூட திட்டமிட்டு திணிக்கப்பட்டதுதான். தேயிலைத் தொழில் துறையின் ஐம்பது சதவீதமான பக்கம்தான் தொழிலாளர் சார்ந்துள்ளது. அதாவது தேயிலையை வளர்த்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும் வரைதான் அது தொழிலாளர்கள் கையில் உள்ளது. அதற்கு பின்னதான அந்த உற்பத்தி பொருளின் சந்தைப்படுத்தலில், ஏற்றுமதியில், வருமானத்தில் தொழிலாளர் சமூகத்தின் வகிபாகம் எதுவும் இல்லை. அவ்வாறே நாம் இந்த 150ஆண்டு காலமும் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால், தேயிலை தொழில் துறை எங்களுடையது என்ற உரிமையோடு வீதியில் இறங்கிப் போராடுகிறோம்.அந்த போராட்டம் ஏன் தமிழர்களால் மாத்திரம், தமிழில் மாத்திரம் ஒலிக்க வேண்டும்?. தேயிலை தொழில் துறை வீழ்ச்சி அடைந்தால், அதுசார்ந்த அனைத்து தரப்பும் போராட வேண்டும். ஆனால், இலங்கையில் நடப்பது அப்படியல்ல. அதற்கான வரலாற்றுப் பின்புலத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.

நமது தொழிலாளர்பக்க பிரச்சினைகளை ஆங்கில, சிங்கள மொழியில் வெளிப்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் இந்த நாட்டின் கொள்கை வகுப்பாளர்களை, பொருளாதார நிபுணர்களை சென்றடைய வேண்டும். அதனையும் தாண்டி சர்வதேசத்தை சென்றடைய வேண்டும். அதற்கு இதுபோன்ற தொழிலாளர் பக்க தொகுப்பு நூல்கள் ஆங்கிலத்திலே வெளிவரவேண்டும்.மலையகத் தமிழர் சமூகத்தில் சாதாரண பொதுமக்களும், அரசியல் சமூகமும், கல்விசார் சமூகமும் சந்திக்கின்ற புள்ளியாக இத்தகைய நூல்வெளியீடுகளும் உரையாடல் வெளிகளும் அமைய வேண்டும்.அத்தகைய உரையாடலின் இடைவெளியே இன்றைய மலையக அரசியலினதும் இடைவெளியாகும். இந்த இடைவெளி நிரப்பப்படாதவரை இன்னும் 150ஆண்டுகள் ஆனாலும் மலையகப் பிரச்சினைகள் தொடர்வதாகவே அமைந்து விடும என்றும் தெரிவித்தார்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா)

Mon, 01/21/2019 - 14:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை