முன்னேற்பாட்டு நடவடிக்கையால் பரீட்சை மோசடிகள் குறைவடைவு

கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் க.பொ.த உயர்தர மற்றும் சாதாரணதரப் பரீட்சைகளில் இடம்பெறும் மோசடிகள் குறைவடைந்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.  

பரீட்சை மோசடிகள் இடம்பெற்ற பின்னர் மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவதைவிட, மோசடிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையே மோசடிகள் குறைவதற்குப் பிரதான காரணம் என்றும் அவர் கூறினார்.  

மாவட்ட மற்றும் வலய மட்டங்களில் உள்ள வலையமைப்புக்களைப் பயன்படுத்தி பரீட்சை மோசடிகள் குறித்த தகவல்களை முற்கூட்டியே அறிந்துகொண்டு அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.  

அண்மையில் நடைபெற்ற சாதாணதரப் பரீட்சையில் தமிழ்மொழிமூலமான பரீட்சை நிலையமொன்றில் மோசடியொன்று இடம்பெறப்போவதாக தகவல் கிடைத்தது.

ஒரு பரீட்சார்த்தியைப் பார்த்து எழுவதற்கு மூவர் தயாராவதாக கிடைத்த தகவலையடுத்து, தனது விடைத்தாளை வழங்குவதற்குத் தயாராகவிருந்த பரீட்சார்த்தியைத் தனிமைப்படுத்தினோம்.

இதனால் குறித்த பரீட்சார்த்தியும், அவரை நம்பியிருந்த ஏனைய பரீட்சார்த்திகளும் எதுவித விடையையும் அளிக்காது வெற்றுத் தாள்களை வழங்கிவிட்டுச் சென்றதாக அவர் தெரிவித்தார்.   இதுபோன்று முன்னேற்பாடாக நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எதுவாக இருந்தாலும் பரீட்சை மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்றார்.  

இதேவேளை, உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் பல்கலைக்கழகக் கல்விக்கு உதவும் வகையிலேயே மாவட்ட ரீதியான மற்றும் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

தாம் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெற்றுள்ளார்களா, எவ்வாறான பாடநெறிகளைத் தெரிவுசெய்யலாம் போன்ற வழிகாட்டலை வழங்குவதற்காக இந்த தரப்படுத்தலை வழங்குகின்றோம். அதுமாத்திரமன்றி உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களில் வரும் மாணவர்களின் பெயர்களை இறுதிக் கட்டத்திலேயே அறிந்துகொள்கின்றோம். அதுவும் ஊடகங்களுக்கு வழங்குவதற்காகவே அவர்களின் பெயர்களை வெளியிடுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.  

(மகேஸ்வரன் பிரசாத்)  

Tue, 01/08/2019 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை