தலிபான் உறுப்பினர் பாகிஸ்தானில் கைது

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆப்கான் தலிபான் மூத்த உறுப்பினர் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்திருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு ஆப்கானில் தலிபான் அரசு கவிழ்க்கப்படும் முன்னர் மத விவகார அமைச்சராக இருந்த ஹாபெஸ் மஹிபுல்லாஹ் பெஷாவரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தலிபான்களுக்கு அடைக்கல பூமியாக பாகிஸ்தான் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவரும்படி பாகிஸ்தான் மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. எனினும் ஆப்கானில் செல்வாக்கு செலுத்துவதற்காக அந்த அமைப்புக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுவதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க விசேட பிரதிநிதி சல்மேய் கலில்சாத் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் நிலையிலேயே மஹிபுல்லாஹ் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க விசேட பிரதிநிதி கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானின் 17 ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்வு ஒன்றுக்கு தலிபான்களை ஊக்குவிக்க பாகிஸ்தான் முன்வர வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை