இராணுவ பலத்தை காண்பிக்க மடூரோ முயற்சி: புதிய ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

வெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ மீது அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் அழுத்தம் அதிகரித்திருக்கும் நிலையில் அவர் தன் மீதான இராணுவத்தின் விசுவாசம் மற்றும் இராணுவ பலத்தை வெளிப்படுத்தி இருப்பதோடு, அவரது தலைமைக்கு சவால் விடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடஸ் புதிய வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தலைநகர் கரகாஸில் தமது ஆதரவாளர்கள் முன் கடந்த புதன்கிழமை குவைடஸ் தம்மை இடைக்கால ஜனாதிபதியாக சுயமாக அறிவித்துக் கொண்டது, மடுரோ அரசு முன்னெப்போதும் சந்தித்திடாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மடுரோ வெற்றி பெற்ற கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை மோசடியானது எனக் கூறியே குவைடோ இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாக உரை நிகழ்த்திய குவைடோ, வரும் புதன்கிழமை அமைதியான ஆர்ப்பட்டம் ஒன்றுக்கு அனைத்து வெனிசுவேல மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஆண்டில் மில்லியன் கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற காரணமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் மனிதாபிமான உதவிகளுக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோன்று வெனிசுவேலா மற்றும் உலகெங்கும் வரும் சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் எதிர்க்கட்சியினர் பலம் கொண்ட வெனிசுவேல பாராளுமன்ற தலைவரான 35 வயது குவைடோ அழைப்பு விடுத்துள்ளார்.

வெனிசுவேலாவில் புதிய தேர்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கெடுவும் வரும் சனிக்கிழமை முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தக் கெடுவை மடுரோ நிராகரித்துள்ளார்.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவ ஒத்திகை ஒன்றில் பங்கேற்ற மடுரோ, இராணும் தமக்கு ஆதரவாக இருப்பதாகவும் நாட்டை பாதுகாக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்வில் மடுரோ இராணுவ வீரர்களை பார்த்து, “ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் இணைந்து சதி செய்கிறீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை, தலைமை தளபதியே” என்று ஒருமித்து அந்த இராணுவ வீரர்கள் குரல் எழுப்பினார்கள். “எந்த ஒரு சூழலிலும், எமது சொந்த பூமியை பாதுகாக்க நாம் தாயாராக இருக்கிறோம்” என்றும் இதன்போது மடுரோ பதிலளித்தார்.

வரும் பெப்ரவரி 10 தொடக்கம் 15 ஆம் திகதி வரை வெனிசுவேல இராணுவம் பெரும் இராணுவ ஒத்திகை ஒன்றுக்கு தயாராகி உள்ளது. “வெனிசுவேல வரலாற்றில் இது முக்கியமானது” என்று மடுரோ விபரித்துள்ளார்.

மறுபுறம் தமதுக்கு அதரவு அளிக்கும்படி குவைடோ கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பரந்த அளவில் புறக்கணிப்புக்கு முகம்கொடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற மடுரோ கடந்த ஜனவரி 10 ஆம் திகதி தனது இரண்டாவது தவணைக்கு பதவி ஏற்றார். எனினும் இந்த தேர்தலை பல வெளிநாட்டு அரசுகளும் வெட்ககரமானது என்று குற்றம்சாட்டின.

இந்நிலையில் குவைடோவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளில் அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இணைந்து கொண்டன. ஏற்கனவே இருபது நாடுகள் குடைவோவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.

எட்டு நாட்களுக்குள் மறு தேர்தலுக்கான அறிவிப்பு வராவிட்டால், குவைடோவை ஜனாதிபதியாக ஏற்கப்போவதாக ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் சனிக்கிழமை தெரிவித்தன.

இது தொடர்பில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபை விவாதத்தில் ரஷ்யா மற்றும் சீனா மடுரோவுக்கு முழுமையான ஆதரவை வெளியிட்டதோடு, அங்கு முன்கூட்டிய தேர்தலை நடத்தும் அமெரிக்கா, கனடா, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய சக்திகளின் அழைப்பையும் நிராகரித்தன.

இதனிடையே வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்ட எதிர்க் கட்சித் தலைவர் குவைடோவுக்கோ, அமெரிக்க தூதர்களுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்கா பதிலடி தரும் என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார். அத்தகைய அச்சுறுத்தல் சட்டத்தின் ஆட்சி மீதான மோசமான தாக்குதலாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

குவைடோவை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்து அமெரிக்காவுடன் தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வதாக மடுரோ வியாழக்கிழமை அறிவித்தார். அத்துடன் 72 மணி நேரத்தில் அமெரிக்கத் தூதர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த காலக்கெடு சனிக்கிழமை முடிவடைய இருந்த நிலையில், வெனிசுவேலாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாகவும், 30 நாள்களில் இரு தரப்பும் ஒன்று மற்றொன்றின் நாட்டில் பரஸ்பரம் ”நல அலுவலகங்களை” அமைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. முறையான தூதரக உறவு இல்லாத நாடுகள், ஒரு அடிப்படையான தொடர்புக்கான புள்ளி வேண்டும் என்று நினைத்தால், ஒன்று மற்றொன்றின் நாட்டில் தங்கள் நலன்களைப் பாதுகாக்க இத்தகைய நல அலுவலகங்களை அமைத்துக்கொள்ளும்.

ஆனால், தங்கள் நாட்டின் தூதர்கள் வெளியேற வேண்டும் என்று கூறும் உரிமை மடுரோவுக்கு இல்லை என்று அமெரிக்க முன்னதாக கூறியுள்ளது.

எண்ணெய் வளம் மிக்க தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவின் புகழ்பெற்ற ஜனாதிபதி ஹூகோ சாவேஸ் 2013இல் இறந்தார். உடனே அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்ற நிகோலஸ் மடுரோவின் ஆட்சிக் காலத்தில் நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை