இந்திய பாண்டிச்சேரி மாநிலத்தை ஒத்ததாக முஸ்லிம் மாகாணம் அமைய வேண்டும்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி

தமிழ்த்  தலைமைகள் அமைச்சு பதவிகளுக்கும், அபிவிருத்தி என்கிற மாயைக்குள்ளும் மயங்கி பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து மலினப்பட்டு போகவில்லை, அவர்கள் உரிமைகள் பற்றி மிக இலாவகமாக தைரியத்துடன் காய்களை நகர்த்தி கொண்டு போராடி வருகின்றனர் என   முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார். 

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அதியுயர்பீட கூட்டம் கொழும்பில்  இடம்பெற்றது. இது தொடர்பாக  நேற்று முன்தினம்  (14) ஊடகங்களுக்கு கருத்து கூறியபோதே  இவ்வாறு தெரிவித்தார். 

அவர் இங்கு மேலும் பேசியதாவது,

கிழக்கில் நில தொடர்பற்ற  முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் ஒன்று  கிடைத்தால் மட்டுமே அதிகார பரவலாக்கல் அர்த்தமுள்ளதாக இருக்கும்.  இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி மாநிலத்தை ஒத்ததாக இந்த முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் அமைய வேண்டும். முஸ்லிம்களுக்கு நில தொடர்பற்ற பெரும்பான்மை மாகாணம் கிடைக்க வேண்டும். இதைத்தான்  மறைந்த தலைவர் அஷ்ரப் தெளிவுபடுத்தி இருந்தார். 

இக்காலகட்டத்தில் தமிழர் தரப்பினர் அவர்களின் உரிமைகள் பற்றி மிகவும் இலாவகமாக தைரியத்துடன் காய்களை நகர்த்தி கொண்டு போராடி வருகின்றனர். அதே நேரம் முஸ்லிம் தரப்புக்கள் அவர்களுக்கு கிடைத்த அமைச்சு பதவிகளை கொண்டாடுவதிலும், அபிவிருத்தி பணிகளை முடுக்கி விடுவதிலும், வாக்குறுதிகளை தாறுமாறாக வழங்கி மக்களை திசை திருப்பி வருவதையும் கண்டுகொள்ள முடிகின்றது. 

அரசியல் யாப்பு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல, பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் நடந்து கொள்கின்றனர். உச்ச கட்ட அதிகார பகிர்வு மாகாணங்களுக்கு கிடைக்கின்றபோது அங்கு வாழ்கின்ற சமூகங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுகூலங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் பொறிமுறையும், சமூகம் சார்ந்த விடயங்களில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வடக்கு மாகாணத்தை பொறுத்த வரை தமிழ் சமூகம் எப்போதும் அரசியல் அதிகாரங்களை அவர்களது ஒற்றுமையின் காரணமாக மிகவும் உறுதியாக தக்க வைத்து வருகின்றது. தமிழர் தலைமைகள் அமைச்சு பதவிகளுக்கும், அபிவிருத்தி என்ற மாயைக்கும் மயங்கி பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து அவர்களை மலினப்படுத்தி கொள்வதில்லை. 

முஸ்லிம்கள் மாகாண மட்டத்தில் அதிகாரத்தை பெற்று கொள்வதற்கு கிழக்கில் நில தொடர்பற்ற வகையில் முஸ்லிம் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு மாகாணத்தை பெற்று கொள்கிற யோசனையை தலைவர் அஷ்ரப் முன்வைத்தார். 

ஆனால் அந்த யோசனைகள் பற்றி எவரும் கரிசனை கொள்வதாக தெரியவில்லை. தலைவர் அஷ்ரப் முன்வைத்த அந்த நில தொடர்பற்ற மாகாண கோரிக்கைக்கு உயிர் கொடுத்தால் மட்டும்தான் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் முஸ்லிம்களும், தமிழர்களும் பரஸ்பரம் பலமான ஓர் அரசியல் பிராந்தியத்தை பெற்று கொண்டு நிம்மதியாக வாழ முடியும்.

(கல்முனை மத்திய தினகரன் நிருபர்) 

Wed, 01/16/2019 - 10:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை