சர்வதேச விசாரணை நடத்தும் ஆபத்து நூறு வீதம் தவிர்ப்பு

எமது படைவீரர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் எதிராக சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தும் ஆபத்து நூறு வீதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஜித் பி பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

எமது படையினரினூடாகவோ அரசியல் தலைவர்களினூடாகவோ இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏதும் தவறுகள் நடந்திருந்தால் அதனை விசாரிக்க இங்கே பலமான கட்டமைப்பு இருக்கிறது என்பதை கடந்த காலத்தில் நாம் நிரூபித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,  

எமது நாட்டிற்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தும் ஆபத்து தலை தூக்கியிருந்தது. இராஜதந்திர உபாயமார்க்கங்கள் ஊடாக எமது நாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை தீர்க்கவும் சர்வதேச தடைகளை நிறுத்தவும் எமக்கு முடிந்தது.  

எமது படையினருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் எதிராக சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தும் ஆபத்தில் இருந்து மீள 4வருடங்களின் பின்னர் எமக்கு முடிந்துள்ளது. இது எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.  

 சர்வதேச அளவில் சாதமான நிலைமை ஏற்படுத்தப்பட்டது. ஒக்டோபர் 26ஆம் திகதியின் பின்னர் ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.  

எமது நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சுயாதீனமாக செயற்பட்டு சட்டத்தின் ஆளுமையை உறுதி செய்தார்கள்.இதனால் எமது படைவீரர்கள் மற்றும் யுத்த காலத்தில் அரசியல் தலைமை வழங்கியவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு செல்லாது இங்கு விசாரிப்பதற்கான பலம் எமக்குள்ளது.   சில தூதுவர்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தூதுவர்கள் செயற்பட வேண்டும். ரஷ்ய தூதுவர் மற்றும் கட்டார் தூதுவர் தொடர்பில் பிரச்சினை உள்ளது என்றும் கூறினார்.(பா)  

(ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்)  

Wed, 01/09/2019 - 09:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை