அமெரிக்க அரச முடக்கத்திற்கு தீர்வு காணும் பேச்சு தோல்வி

ஜனாதிபதி டிரம்ப் பாதியில் வெளிநடப்பு

19 நாட்களாக நீடிக்கும் அமெரிக்க அரசின் பகுதி அளவு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஜனநாயக கட்சித் தலைவர்களுடனான மற்றொரு பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாதியிலேயே வெளியேறியதால் மீண்டும் ஒருமுறை தோல்வியில் முடிந்துள்ளது.

அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் டிரம்பின் திட்டத்திற்கு நிதி அளிப்பதை ஜனநாயக கட்சி தலைவர்களான நான்சி பெலோசி மற்றும் சக் ஸ்குமர் நிராகரித்ததை அடுத்தே கடந்த புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் அவர் வெளிநடப்புச் செய்துள்ளார்.

இந்த இருவரோடுமான பேச்சுவார்த்தை “நேரத்தை வீணடித்துவிட்டது” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பகுதி அளவு முடக்கத்தால் சுமார் 800,000 அரச ஊழியர்கள் சம்பளம் இன்றி வேலை செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது.

செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவரான ஸ்குமர் இந்த சந்திப்புக் குறித்து கூறியதாவது, “சபாநாயகர் பெலோசியிடம் அவர் (டிரம்ப்), எனது சுவருக்கு நீங்கள் இணங்குகிறீரா? என்று கேட்டார். அவர் இல்லை என்றார்.

அவர் எழுந்து நின்று, அப்படி என்றால் எமக்கிடையே பேச எதுவும் இல்லை என்று கூறிவிட்டு வெளியேறிச் சென்றார்” என்று விபரித்தார்.

“தனது தந்தையிடம் இன்னும் பணம் கேட்பது போல் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி முடியாது” என்று பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பெலோசி குறிப்பிட்டார்.

டிரம்ப் மேஜையை தட்டி ஆவேசமாக பேசியதாகவும் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால் மிகுந்த ஆத்திரத்துடன் அவர் வெளியேறியதாகவும் ஸ்குமர் குறிப்பிட்டார்.

டிரம்பின் ஜனாதிபதி தேர்தலின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றான மெக்சிகோ எல்லையில் இரும்புத் தடுப்பு ஒன்றை அமைக்க 5.7 பில்லியன் நிதியை கோருகிறார்.

எனினும் இந்த மாதத்தில் பிரதிநிதிகள் சபையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஜனநாயக கட்சி அந்த நிதியை மறுத்து வருகிறது.

இதனால் போதிய நிதியின்றி கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் ஒன்பது மத்திய அரச நிறுவனங்கள் முடங்கியுள்ளன.

Fri, 01/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை