கிம் - டிரம்ப் இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இடம்பெற வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையே நடைபெற சாத்தியமுள்ள இரண்டாவது உச்சி மாநாட்டுக்கு முன்னர் வட கொரியாவின் அரசு தரப்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரியொருவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

கிம் யோங் சோல் என்ற அந்த வட கொரிய பேச்சுவார்த்தையாளர் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து கிம்மிடமிருந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஒரு கடிதத்தை கொண்டு சென்றதாக தென் கொரிய ஊடக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோவை கிம் யோங் சோல் நேற்று சந்தித்துள்ளார்.

டிரம்ப் மற்றும் கிம் இடையேயான இரண்டாவது உச்சி மாநாடு வியட்நாமில் நடக்கக்கூடும் என்ற ஊகங்கள் தற்போது அதிகரித்துள்ளன.

வரும் பெப்ரவரியில் வட கொரிய தலைவர் கிம் கம்யூனிச நாடான வியட்நாமுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பெயர் குறிப்பிடாமல் சில ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் கிம் மற்றும் டிரம்ப் இடையே நடந்த வரலாற்று சிறப்புமிக்க சிங்கபபபுூர் உச்சி மாநாட்டுக்கு பின்னர் வட கொரியாவை அணு ஆயுத பிரதேசமற்றதாக மாற்றும் திட்டத்தில் சிறிய அளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் உளவுப்படை தலைவரான இராணுவ ஜெனரல் கிம் யோங் சோல், வட கொரிய தலைவர் கிம்மின் வலது கரமாக வர்ணிக்கப்படுகிறார்.

தற்போது அமெரிக்காவுடனான வட கொரியாவின் பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டின் சார்பாக பங்கேற்கும் முக்கிய பிரமுகராக இவர் உருவாகியுள்ளார்.

ஒரு சர்ச்சைக்குரிய நபராக அறியப்படும் கிம் யோங் சோல், 2010 இல் இராணுவ உளவுத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் தென் கொரிய போர்க்கப்பல்களின் மீதான வட கொரியாவின் தாக்குதல் திட்டங்களில் பின்புலமாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வொஷிங்டனுக்கு கிம் யோங் சோல் சென்றிருந்தார், இரு நாடுகளுக்கும் இடையே நடந்த வரலாற்று பேச்சுவார்த்தைக்கு முன்பாக அவர் டிரம்பை சந்தித்து வட கொரியாவின் சார்பாக ஒரு கடிதம் அளித்தார்.

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை