எதிர்வரும் ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தலையே எதிர்பார்க்கிறோம்

 ஜனாதிபதி தேர்தலை முதலில் எதிர்பார்க்கின்ற நிலையில் அத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியில் களம் இறங்கவுள்ளது என இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அட்டாளைசசேனை உள்ளுராட்சி சபையினால் நேற்றுமுன்தினம் (30) நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் ஒன்றையே முதலில் எதிர் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

அத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியில் களம் இறங்கவுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நவீன முறையிலான கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கான பிராந்திய சிகிச்சைப் பிரிவு ஒன்றை பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் அமைக்கவுள்ளோம்.

மேலும் பொத்துவில், சம்மாந்துறை ஆகிய ஆதார வைத்தியசாலைகளில் 4000 சதுர அடி கொண்ட கட்டடத் தொகுதிகளையும் அமைக்கவுள்ளோம்.

இதேவேளை அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு 20 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் கட்டட நிர்மாணம் இடம்பெற்று வருவதுடன், கம்பரலிய வேலைத்திட்டத்தில் 20 மில்லியன் ரூபாவும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் 2000 இருக்கைகளைக் கொண்ட நவீன கேட்போர் கூடம் அமைப்பதற்கும் நிதியொதுக்கீடு செய்துள்ளேன்.

மேலும் மருதமுனை, இறக்காமம், பாலமுனை, காரைதீவு, ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் தலா 200 மில்லியன் ரூபா எதிர் வரும் ஆண்டில் நிதியொதுக்கீடு செய்யவுள்ளேன்.

(அம்பாறை சுழற்சி நிருபர்)

Tue, 01/01/2019 - 09:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை