கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானதும் தோட்ட கம்பனி பங்குகளில் வீழ்ச்சி

கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளத்தை அதிகரிக்க பெருந்தோட்டக் கம்பனிகள் இணங்கிய நிலையில் பங்குச் சந்தையில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன. இந்த சம்பள அதிகரிப்பினால் ஒவ்வொரு கம்பனியும் வருடமொன்றுக்கு சராசரியாக 350மில்லியன் முதல் 450மில்லியன் வரையில் சம்பளங்களை அதிகரிக்க வேண்டியிருப்பதாக பெருந்தோட்ட தொழில்துறையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.  

சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் பட்டியலிடப்பட்ட 18பெருந்தோட்ட கம்பனிகளில் 10கம்பனிகளின் பங்குகள் சரிவைக் காண்பித்தன. தலவாக்கலை பெருந்தோட்டம், உடபுசல்லாவ பெருந்தோட்டம், பொகவந்தலாவ பெருந்தோட்டம் ஆகியவற்றின் பங்குகள் சரிவைக் காண்பித்தன.  

பெருந்தோட்டக் கம்பனிகளில் தலா 7ஆயிரம் முதல் 8ஆயிரம் வரையானவர்கள் பணியாற்றிவரும் நிலையில் ஒவ்வொரு கம்பனியும் தலா 350மில்லியன் முதல் 450மில்லியன் ரூபா வரையில் சம்பள உயர்வை வழங்க வேண்டியிருப்பதாக கம்பனிகளின் பேச்சாளர் குறிப்பிட்டார். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் 20கம்பனிகளில் ஏறத்தாழ 154,000ற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

புதிய ஒப்பந்தத்தின் படி 9மில்லியன் ரூபாவரையில் செலுத்தவேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.  

எனினும், 2016ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 20ரூபா மாத்திரமே அதிகரிக்கப்பட்டிருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2016ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச் சம்பளம் 500ரூபாவாக வழங்கப்பட்டதுடன், உற்பத்தி ஊக்கக்கொடுப்பனவாக 140ரூபாவும், விலைக் கொடுப்பனவாக 60ரூபாவும், வருகைக் கொடுப்பனவாக 60ரூபாவுமாக மொத்தச் சம்பளம் 730ரூபா வழங்கப்பட்டது.

எனினும் 2019ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச் சம்பளம் 700ரூபாவாக அதிகரிக்கப்பட்டதுடன்,  விலைக் கொடுப்பனவு 50ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உற்பத்தி ஊக்குக் கொடுப்பனவு, வருகைக் கொடுப்பனவு என்பன நீக்கப்பட்டுள்ளன.  

Wed, 01/30/2019 - 09:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை