அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்படாத நிலையில் இனவாதத்துக்கு தூபம்

விகாரைகளிற்குள் வழிபட்டு வெளியே வந்தபின் இனவாதத் தீயைபரப்புவது பெரும் விந்தை 

புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் இதுவரையும் முன்வைக்கப்படாத நிலையில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, இனவாதத்தை தூண்டுவதற்கு ஒரு சாரார் முயற்சித்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு கொண்டு வந்து நாட்டை பிளவுபடுத்தப் போவதாக தெரிவிப்பவர்கள் விகாரைகளுக்குச் சென்று வழிபட்டுவிட்டு வெளியில் வந்து மக்களுக்கு அப்பட்டமான பொய்களை தெரிவிப்பது விந்தையானதாகவுள்ளது. இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி இனவாதத்திற்கு தூபமிடவும் நாட்டுக்கு தீவைக்கவும் முயற்சிக்க வேண்டாம் என அத்தகையோரை தாம் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

நாட்டைபிளவுபடுத்துவதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதாக சில அரசியல்வாதிகள் மகாநாயக்க தேரர்களை ஏமாற்றி திசை திருப்ப பார்ப்பது கவலைக்குரியதாகும். பஞ்சசீலத்தை பாதுகாக்கின்றவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு மகாநாயக்க தேரர்களுக்கு பொய் தகவல்களை வழங்குபவர்களுக்கு நடக்கப்போவது என்னவென்று தெரியாது.

புதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். சில ஊடகங்கள் இல்லாத அரசியலமைப்பை இருப்பதாக காட்ட முயற்சிக்கின்றமை கவலைக்குரியதாகும். நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாகவும் பொலிஸ் துறையை சீர்குலைக்கப் போவதாகவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். பொலிஸ் தொடர்பான கருத்துக்கள் அரசியல் கட்சி, முதலமைச்சர்களின் யோசனைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.

கூட்டமைப்பின் முதலமைச்சர் ஒருவர் பொலிஸாருக்கு அதிகளவு அதிகாரம் வழங்கவேண்டுமென கூறுவதாகவும் அது தொடர்பில் தாம் எவருக்கும் தெளிவுபடுத்த முடியுமென்றும் தேவையேற்படின் அதனை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்களையும் அரசியலமைப்பு யோசனைகளை முன்வைக்க முடியும். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கும் அரசியல் தீர்வு அவசியமாகிறது.

இனவாதத்திற்கு தூபமிட்டு பொய்யான அரசியலமைப்பை மக்களுக்கு காட்டி பிச்சைக்காரனின் புன்னைப் போன்று அதனையே காட்டி நாட்டுக்கு தீவைக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் பொய்யான விமர்சனங்களை மேற்கொள்ளும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு ஒன்று இருக்குமானால் அதனை பகிரங்கமாக காட்டட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

(நமது நிருபர்)

Mon, 01/14/2019 - 10:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை