மக்கள் நல வரவு - செலவு திட்டத்திற்கான யோசனை

அமைச்சரவைக்கு இன்று சமர்ப்பிப்பு

 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை இன்று (02) அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

பொதுமக்களின் பொருளாதார நிலைமைகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நகரையும் கிராமத்தையும் ஒன்றுபோல் ஊக்குவிப்பதற்குமான யோசனைகள் உள்ளடங்கியதாக இம்முறை வரவு செலவுத்திட்டம் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (02) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. வறுமையில் வாடும் மக்களை அதிலிருந்து மீட்டு பொருளாதார, சமூக ரீதியில் பலப்படுத்துவதற்கு வழிகாட்டும், உள்நாட்டு புதிய உற்பத்திகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு ஊக்கம் வழங்கும் மக்கள் நல யோசனைகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் இன்று நடைபெறும் முதலாவது அமைச்சரவையில் 2019 வரவு செலவுத்திட்டம் தயாரிப்பதற்கு அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைப்பது உகந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

வறுமையற்ற நாடொன்றை உருவாக்குவற்கு ஊக்கமளிக்கும் யோசனைகளும் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரித்து துரிதப்படுத்தும் திட்டங்களும் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

அரசியல் நெருக்கடி நிலை காரணமாக முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை தெரிந்ததே. கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி 30 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது. எனினும் அமைச்சுக்களுக்கான பொறுப்புகள் வர்த்தமானியூடாக வெளியிடப்படாத நிலையில் அன்றைய தினம் முதலாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கான பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளதால் இன்று முதலாவது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றம் நடைபெற்று நாட்டில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டது தெரிந்ததே. இந்த குழப்பநிலையை தொடர்ந்து மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டு புதிய அமைச்சரவையும் பெறுப்பேற்றது. வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய பல அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. (பா)

Wed, 01/02/2019 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை