உத்தேச அரசியலமைப்பை வைத்து மஹிந்த தரப்பு இனவாத பிரசாரம்

நாட்டை பிளவுபடுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பொன்றை கொண்டுவரப் போவதாக போலி பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. மஹிந்த தரப்பினரால் முன்னெடுக்கப்படும் இந்த இனவாத பிரசாரத்துக்கு மக்கள் பலியாகக்கூடாது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் தெற்கில் மஹிந்த தரப்பினரும், வடக்கில் உள்ள சில தரப்பினரும் தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை விதைத்து வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் கூடிய  விரைவில் புதிய அரசியலமைப்பு நிறை வேற்றப்படவுள்ளதாக தென்பகுதியில் கூறி வருகின்றனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ, சுமந்திரனோ அல்லது மஹிந்த ராஜபக்‌ஷவோ நினைத்த மாத்திரத்தில் அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது. அரசியலமைப்பு விவகாரம் இரண்டு முக்கிய படிமுறைகளைக் கொண்டுள்ளது.

அரசியலமைப்பு தயாரிப்பு மற்றையது அரசியலமைப்பு நிறைவேற்றம். தற்பொழுது பாராளுமன்றத்தில் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளே இடம்பெறுகின்றன.

அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையில் அதைச் சமர்ப்பித்து அங்கு அனுமதி பெற வேண்டும். பின்னர் பாராளுமன்றத்தில் விவாதித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறை வேற்றப்பட வேண்டும்.பின்னர் இது மாகாணசபைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கும் அனுமதி பெறப்பட வேண்டும். இவ்வாறு அனுமதி பெறப்பட்ட அரசியலமைப்பு மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதுடன், அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் இருக்கும் நிலையில் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு பெப்ரவரியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருப்பதாக அரசியல் தலைவர்கள் அப்பட்டமான பொய் கூறுகின்றனர். அரசியலுக்காக அவர்களால் கூறப்படும் பொய்களுக்கும், இனவாத பிரசாரங்களுக்கும் மக்கள் பலியாகக்கூடாது.

அது மாத்திரமன்றி தற்பொழுதுள்ள பாராளுமன்றத்தினால் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றவும் முடியாது.

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த அரசாங்கங்களே அரசியலமைப்புக்களை நிறைவேற்றியுள்ளன. இவ்வாறான நிலையில் தற்போதைய பாராளுமன்றத்தால் அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது. பாராளுமன்றத்தில் ஒருநாள் ஒரு பக்கத்திலும் மறுநாள் மற்றைய பக்கத்திலும் உறுப்பினர்கள் அமரும் நிலையில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது.

நாட்டில் அரசியல் ரீதியான சதியை முன்னெடுத்து அதில் தோல்வியடைந்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் இனவாதத்தை முன்நிலைப்படுத்தி மக்களைக் குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர். இதன் ஓர் அங்கமாகவே நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் அரசியலமைப்பு நிறைவேற்றப்படப்போவதாக பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜே.வி.பியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத் 

 

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை