தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம்

ஜனாதிபதியின் தலைமையில் முல்​லைத்தீவில் இன்று ஆரம்பம்

போதைப் பொருளுக்கு எதிராக மாணவர்கள் இன்று உறுதிமொழி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் “போதையிலிருந்து விடுதலைபெற்ற நாடு” என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தேசிய போதைப்பொருள் தடுப்பு -பாடசாலை வாரம்” இன்று 21ம் திகதி ஆரம்பமாகிறது.  

இந் நிகழ்வு இன்று காலை 10மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.  

நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் இன்று இத்தேசிய போதை ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. கல்வி அமைச்சு இது குறித்து சகல கல்வி வலயங்களுக்கும் அறிவித்துள்ளது.  

பாடசாலை மாணவ, மாணவிகளை போதைப் பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் இன்று 21முதல் 28ஆம் திகதி வரை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (21) முற்பகல் 9.00மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.  

இந்நிகழ்வுடன் இணைந்ததாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வட மாகாண பாடசாலை மாணவர்கள் தமது காலைக் கூட்டத்தின்போது போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய உறுதிமொழியை மேற்கொள்ளவுள்ளனர்.  

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரத்தின் முதல் நாளான ஜனவரி மாதம் 21ஆம் திகதி போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் மாணவர்களை தெளிவுபடுத்தும் வகுப்பறை செயலமர்வுகளும் ஜனவரி 22ஆம் திகதி பெற்றோர்களை பாடசாலைக்கு வரவழைத்து வகுப்பறைகளில் மாணவர்களுடன் இணைத்து மேற்கொள்ளும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத் திட்டங்களும் ஜனவரி 23ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பான சட்ட வரையறைகள் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. 

ஜனவரி மாதம் 24ஆம் திகதி போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசியல் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஊடகங்களின் வாயிலாக பாடசாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான செய்திகளை கொண்டுசெல்வதற்கு ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்குபற்றலில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத் திட்டங்களை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி மாதம் 27ஆம் திகதி மதவழிபாட்டுத்தலங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1984கட்டணமற்ற தொலைபேசி எண்ணை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தும் நிகழ்வும் இந்த விழாவின்போது ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது. 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 11 பாடசாலைகளை புனரமைப்பதற்கான அடிப்படை செலவுக்கான நிதி வழங்கும் நிகழ்வு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான நிதி வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகள் இதன்போது இடம்பெறவுள்ளன.

Mon, 01/21/2019 - 08:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை