நாட்டை வலய அலகுகளாக பிரிக்க ஆதரவளித்த மஹிந்த இன்று புதிய யாப்புக்கு எதிராக போலிப் பிரசாரம்

ஒற்றையாட்சிக்கு மாற்றமான எந்த யோசனையையும் ஆதரிக்க தயாரில்லை 

நாட்டை வலயங்களாக பிரித்து வலய அலகுகளாக உருவாக்கும் யோசனைக்கு முதலில் ஆதரவு வழங்கியது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவே  எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலே ஐ.தே.க தொடர்ந்து இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

 ஒற்றையாட்சியை பாதுகாத்தவாறு முன்வைக்கப்படும் எந்த ஒரு யோசனையையும் ஆதரிக்க தயார். ஆனால் அதற்கு மாற்றமாக முன்வைக்கப்படும் எந்த யோசனையையும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.   காலி,கராகொட, யக்கலமுல்லயில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த மதகுருமார் ஓய்விடம் மற்றும் அறநெறிப்பாடசாலை என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.  

 உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் மல்வத்து பீடாதிபதியின் கருத்து பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது. அதனை நாம் கவனமாக ஆராய வேண்டும்.  

புதிய யாப்பினால்நாடு துண்டாடப்படுமென சிலர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் மகாசங்கத்தின் கருத்து மிக முக்கியமானது. புதிய யாப்பினால் நாடு துண்டாடப்படும் என குற்றஞ்சாட்டப்பட்டாலும் இன்னும் அரசியலமைப்பு நகல் தயாரிக்கப்படவில்லை.  

முழு பாராளுமன்றமும் இணைக்கப்பட்டு அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டது. சகல கட்சிகளையும் உள்ளடக்கி வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டது.அதன் தலைவராக நான் செயற்படுகிறேன். இங்கு முன்வைக்கப் பட்ட சகல யோசனைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த யோசனைகளின் பிரகாரம் இடைக்கால அறிக்கை தயாரிக்கப் பட்டது. இது தொடர்பில் விவாதம் கூட நடத்தப்பட்டது.  

இதற்கிடையே நிபுணர் குழுவினால் அறிக்கை தயாரிக்கப்பட்டது. சில விடயங்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்படாததால் மாற்று அறிக்கை தயாரிக்கப்பட்டது. கட்சிகளின் யோசனையின்படி மற்றொரு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

 புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வர பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை.அந்தளவு ஆதரவு இருக்கிறதா இல்லையா என்று இன்னும் தெரியாது.அது தொடர்பில் கட்சித் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஒத்துழைப்பு கிடைக்குமானால் புதிய யாப்பு தயாரிக்கும் பணியை ஆரம்பிக்கலாம். ஒத்துழைப்பு இல்லாமல் புதிய அரசியலமைப்பு தயாரிப்பதில் எந்தப் பயனும் இல்லை.

புதிய யாப்பு தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும் இதனை பெரிய பிரச்சினையாக மாற்றத் தேவையில்லை.   

 1995 இல் முன்வைக்கப்பட்ட வலய அலகு யோசனைக்கு மஹிந்த ராஜபக்‌ஷ ஒத்துழைப்பு வழங்கினார். வலய அலகு முறையுடன் கூடிய புதிய அரசியலமைப்பு நகலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது அமைச்சராக இருந்த மஹிந்த அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார்.

 ஆனால் நான் அந்த நிலைப்பாட்டல் நான் இருக்கவில்லை.  

 வலய அலகு தொடர்பில் நாம் அவரிடம் வினவியபோது நாட்டை வலயங்களாக பிரிப்பதால் நாடு துண்டாகாதென அவர் அன்று கூறினார்.வலய முறையைக் கொண்டுவர வேண்டும் என யாராவது யோசனை முன்வைத்தால் நாடு துண்டாகும் என அவரால் கூற முடியாது.  

 உச்சளவில் அதிகாரப்பகிர்வு வழங்க வேண்டும் எனச் சர்வகட்சி மாநாட்டை கூட்டி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். தைப்பொங்கல் நிகழ்வில் தமிழில் உரையாற்றிய அவர், சிங்கள , தமிழ்,முஸ்லிம் சகல இனங்களும் உடன்படக்கூடிய புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர வேண்டும் என்றும்  கூறியிருந்தார்.  

இவை எதுவும் நாட்டை துண்டாடக் கூடியவை என எம்மால் கூற முடியாது.  

நான் எனது நிலைப்பாட்டை மாற்றவில்லை எனச் சிலர் குற்றம் சுமத்துகின்றனர். ஒற்றையாட்சி நிலைப்பாட்டில் இருப்பதாக சகலரும் கூறுகின்றனர்.

அன்று டீ.எஸ்.சேனாநாயக்க.ஜே.ஆர் ஜயவர்தன போன்றோர் ஒற்றையாட்சி நிலைப்பாட்டில் இருந்தனர்.இலங்கை ஒற்றையாட்சியாக இருக்க வேண்டும் என ராஜீவ் காந்தியிடம் கூட ஜே.ஆர் கையொப்பம் பெற்றிருந்தார்.  

Mon, 01/21/2019 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை