பிரிட்டன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு

பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிட் உடன்படிக்கையை அந்நாட்டு பாராளுமன்றம் நிராகரித்ததை அடுத்து அவரது அரசு நம்பிக்கையில் வாக்கெடுப்பு ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ளது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான நிபந்தனைகளுக்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் அந்த உடன்படிக்கை 230 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து தொழிலாளர் கட்சி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு பிரிட்டன் நேரப்படி நேற்று இடம்பெறவிருந்தது.

எனினும் மாற்றுத் திட்டத்துடன் அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு வருவதாக பிரதமர் மே, எம்.பிக்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

''இந்த வாக்கெடுப்பின் முடிவு இந்த பாராளுமன்றம் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இந்த பாராளுமன்றம் எடுத்த முடிவை அரசு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறதா? என்பதை நாங்கள் உறுதி செய்யத் தேவை இருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

வரும் மார்ச் 29இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதிராக 432 வாக்குகளும், ஆதரவாக 202 வாக்குகளும் பதிவாகின.

இது பிரிட்டன் வரலாற்றில் ஓர் ஆளும் அரசுக்கு ஏற்பட்ட மிக பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக எதிர்கட்சிகள் வாக்களித்தது போன்று பிரதமர் தெரேசா மேயின் சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்களும் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 118 கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்கள் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதேபோன்று இயன் ஆஸ்டின் உள்ளிட்ட தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 எம்.பிக்கள் பிரதமரின் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அரசியல் இழுபறி ஏற்பட்டிருக்கும் நிலையில் பிரெக்சிட் உடன்பாட்டுக்கான காலம் கடந்து செல்வதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

“வாக்கு முடிவுகளை இட்டு நாம் வருந்துகிறோம். அடுத்த நடவடிக்கை குறித்து பிரிட்டன் அரசு தனது நோக்கத்தை முடிவுமான விரைவில் தெளிவுபடுத்த வேண்டும்” என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்ட் டஸ்க் சார்பில் பேசவல்ல ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் அதற்கே உரித்தான அணுகுமுறையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரெக்ஸிட் தலைமை மத்தியஸ்தர் மைக்கேல் பர்னிர் கூறியுள்ளார்.

"அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என கூறுவது பிரிட்டன் அரசை பொறுத்தது" என்று கூறியுள்ள அவர் "ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான முடிவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உறுதியுடன் உள்ளது" என்றார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி நிதி அமைச்சரும் துணை சான்சிலருமான ஒலாப் ஷோல்ஸ் "செவ்வாய்கிழமை ஐரோப்பாவுக்கு கசப்பான நாள்" என்று கூறியுள்ளார்.

"நாங்கள் தயாராகவுள்ளோம். கடினமானதொரு பிரெக்சிட் ஐரோப்பாவுக்கும் பிரிட்டனுக்கும் குறைந்தபட்ச ஈர்ப்புடைய தெரிவாக இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனை பற்றி கருத்து தெரிவிக்கையில், "முக்கியமாக அவர்கள் மீதே அழுத்தங்கள் உள்ளன" என்று பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவெல் மக்ரோங் கூறியுள்ளார்.

ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் வெளியேறுவது பெரும் பாதிப்பாக அமையும் என்பதால் நிலைமாற்ற காலம் முக்கியமானது என்று அவர் எச்சரித்துள்ளார்.

"பிரிட்டன் வெளியேறுவது பற்றி இனிமேல் திட்டமிட முடியாது என்பதால் நிலைமாற்ற காலம் பற்றி நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்பது, ஒரேயடியாக எல்லா தொடர்புகளையும் துண்டித்து விட்டு பிரிட்டன் வெளியேறுவதாக அமைந்துவிடும்.

இதன்படி வரும் மார்ச் 29 ஆம் திகதிக்கு முன்னர் பிரிட்டன் பிரெக்சிட் ஒப்பந்தத்தை உறுதி செய்யாத பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலுவையின் பல பில்லியன் கடனுடன் வெளியேற வேண்டி ஏற்படும் என்பதோடு வர்த்தக செயற்பாடுகளுக்கான நிலைமாற்ற ஏற்பாடுகள் இல்லாததால் அது பெரும் பொருளாதார பேரழிவை சந்திக்க வேண்டி ஏற்படும்.

ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த 1973ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.

ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் செயல்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளதால் பிரிட்டன் தனது தனித்துவத்தையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் பிரதமர் தெரேசா மே பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் வெளியேற்றத்துக்குப் பின்னர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை வெளியிட்டார்.

அந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து 6 அமைச்சர்கள் பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை