அரச வாகனங்களுக்கு காபன் வரி விலக்களிப்பு வழங்கப்படவில்லை

Rizwan Segu Mohideen
அரச வாகனங்களுக்கு காபன் வரி விலக்களிப்பு வழங்கப்படவில்லை-State Vehicles Not Exempted From Carbon Tax-Finance Ministry

நிதியமைச்சு அறிவிப்பு

அரசாங்க வாகனங்களுக்கு காபன் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் உண்மையில்லை என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட காபன் வரி, இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதோடு இவ்வரியானது அரசாங்க வாகனங்களுக்கும் பொருந்தும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சார சக்தியின் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாத்திரமே இவ்வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2018 இல 35 எனும் நிதி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இவ்வரியானது, கொள்வனவு செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும், முதலாவது ஆண்டு தவிர்ந்து வருடாந்தம், வாகன வருமான அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படும் வேளையில் அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க வாகனங்களுக்கு காபன் வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, ஒரு சில ஊடகங்களில் வெளியான தகவலில் எவ்வித உண்மையும் கிடையாது என, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வாகனத்தின் எஞ்சின் கொள்ளளவை அடிப்படையாகக் கொண்டு கன சென்டிமீட்டருக்கான காபன் வரி, 3 பிரிவுகளின் கீழ் வருடாந்தம் அறவிடப்படுகின்றது.

பயணிகள் பஸ்களுக்கு வருடாந்தம் நிலையான கட்டணமாக காபன் வரி அறவிடப்படும் என்பதோடு ஐந்து வருடங்களுக்கு குறைந்த வாகனங்களுக்கு ரூபா 1,000 உம், 5 - 10 வருடங்களுக்கு உட்பட்ட பஸ்களுக்கு ரூபா 2,000 உம், 10  வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பஸ்களுக்கு ரூபா 3,000 உம் வரியாக அறவிடப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கம் பசுமை பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார திட்டங்களின் கீழ், சூழலுக்கு இசைவான நடவடிக்கையாக, சூழலுக்கு பாதிப்பு குறைவான எதிர்கால இலங்கையை கருத்திற்கொண்டு இந்த வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதியமைச்சு சுட்காட்டியுள்ளது.

வாகனத்தின் வகை 5 வருடங்களுக்கு
உட்பட்டவை
5 - 10 வருடங்கள் 10 வருடங்களுக்கு
மேல்
ஹைபிரிட்
(பெற்றோல்/டீசல்)
cmஇற்கு 25 சதம் cm3 இற்கு 50 சதம் cm3 இற்கு ரூ. 1
எரிபொருள்
(பெற்றோல்/டீசல்)
cm3 இற்கு 50 சதம் cm3 இற்கு ரூ. 1 cm3 இற்கு ரூ. 1.50
பயணிகள் பஸ் ரூ. 1,000/= ரூ. 2,000/= ரூ. 3,000/=

 

Thu, 01/17/2019 - 18:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை