புதிய யாப்பில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்வாங்கினால் ஏற்கத் தயார்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் அனைத்தையும் புதிய அரசியல்யாப்பு பூரணமாக ஏற்றுக்கொள்ளுமேயானால் தாம் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

எனினும், ஒற்றையாட்சியா? சமஷ்டியா? என்ற வாதச்சண்டைக்குள் தீர்வு முயற்சிகள் முடங்கிப்போய் விட அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

நேற்றையதினம் கூடிய அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இத னைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் அதிகாரங்களே எமது மக்களின் அபிலாசைகள். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். பகிரப்பட்ட அதிகாரங்கள் நிலைபேறானதாகவும் மீளப்பறிக்கப்பட முடியாதவையாகவும் இருத்தல் வேண்டும். இறைமையுள்ள மாகாணங்களை கொண்ட இறைமையுள்ள நாடாக இருத்தல் வேண்டும். மதச்சார்பற்ற, இரு மொழிக்கொள்கையுள்ள நாடாகவும் இருத்தல் வேண்டும்.

தமிழ் பேசும் மக்களுக்கு விசேட அதிகாரங்களை கொண்ட அரசியல் ஏற்பாடு உள்ளடக்கப்பட வேண்டும். இவைகள் மட்டும் இருந்தால் போதும். இத்தகைய தெரிவிற்கு எந்தப்பெயரை சூட்டினாலும் நாம் ஏற்றுக்கொள்வோம்.

தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு முகமும், சிங்கள மக்களுக்கு இன்னொரு முகமும் காட்டும் மாய வித்தைகளை அரசியல் தீர்வு விடயத்திலும் காட்டுவதை அனுமதிக்க முடியாது. அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும், அதனை மீளமைப்பதற்குமான அதிகாரங்கள் மத்திய அரசிற்கே உண்டு என இங்கு கொண்டுவரப்படும் வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 01/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை