வடக்கு மக்களுக்கு தண்ணீர் பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு

வடக்கு மக்களின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதன் மூலமே தமது நோக்கம் முழுமையடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நிலவும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர்ப்பாசனம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வினை யடுத்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  

அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,  

வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களின் கிராமிய பிரதேசங்களில் குடிநீருக்காக மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.  

அப்பகுதி மக்கள் வாரத்தில் ஒரு தடவையே வெகு தூரம் சென்று குளிக்கும் நிலை உள்ளது. கிராமங்களில் குடிப்பதற்குக் கூடத் தண்ணீர் கிடையாது. இந்த நிலையில் புதிய தண்ணீர் முதலாளிகள் உருவாகியுள்ளனர்.  

பொது சுகாதார பரிசோதகரோ அல்லது நீர் வழங்கல் சபையோ எந்தவிதத்திலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத நீரே ‘பரல்கள்’ மூலம் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  

ஒரு போத்தல் தண்ணீரின விலை 2,3ரூபாவாக விற்கப்படுகிறது. அம்மக்களின் குடிநீர், விவசாயத்திற்கான நீர்ப்பாசனம் உள்ளிட்ட தேவைகள் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களின் வறுமை நிலையையும் குறிப்பிடவேண்டும்.  

நாட்டின் அரசாங்க கொள்கைகளுக்கிணங்க நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது போன்று நாட்டு மக்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அனைத்துவித அர்ப்பணிப்புகளையும் செய்வோம்.  

எதிர்கொள்ள நேரும் சவால்களை வெற்றிகொள்ள கட்சி, நிறம், மத பேதங்களை மறந்து நாட்டுக்காகச் சிந்தித்து உழைக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம்.  

கட்சி என்ற ரீதியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான செயல்கள். நிகழ்ச்சி நிரல்கள் அவசியமற்றவை, தனிப்பட்டவர்களின் நிகழ்ச்சி நிரலும் அவசியமில்லை.  

நாட்டின் பொருளாதாரம், வறுமை ஒழிப்பு வினைத்திறனுடனான எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற செயற்பாடுகளுக்கு தனிப்பட்ட அல்லது கட்சி நிகழ்ச்சி நிரல்களைத் தவிர்த்து அனைவரும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.  

அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள்  ஊழலுக்குள்ளாகியுள்ள நிலையில் நாட்டைக் கட்டியெழுப்பும் சவால்களை நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். நாட்டை நேசிக்கும் கட்சிகளின் ஆதரவைப் பெறும் வகையில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியம். நேர்மையுடன் செயற்படும் அர்ப்பணிப்புள்ளவர்களிடம் இந்த நாட்டை ஒப்படைக்கும் வகையில் மக்களின் தீர்மானங்கள் அமையவேண்டும்.  

மாத்தளை மாவட்ட மக்கள் போன்றே ஏனைய மாகாணங்களினதும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

நாட்டின் வறுமை நிலையில் வாழும் மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவது எமது முன் உள்ள மற்றுமொரு சவாலாகும்.  

இதற்கென நாட்டில் நிலவும் ஊழல் மோசடிகளை முற்றாகத் தடுப்பது முக்கியமானதாகும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமையளிப்பது வருமானத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுவது அவசியமாகும். அத்துடன் நாட்டில் அறிவுபூர்வமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதும் முக்கியமாகும்.  

நாட்டின் அபிவிருத்தி போன்றே எமது எதிர்கால சந்ததியினரின் வினைத்திறன் அபிவிருத்தியும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதேபோன்று பௌத்த மதத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அத்துடன் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தமது ஆன்மிக செயற்பாடுகளை சுதந்திமாக மேற்கொள்ள அவர்களுக்கான வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும்.  

வடக்கு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமே எனது எதிர்பார்ப்பு முழுமையடையும். அதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Wed, 01/09/2019 - 08:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை