மின்கட்டணத்தை கூட்டுவதற்கு இடமளியேன்

எக்காரணம் கொண்டும் மின்சார சபையை தனியார் மயப்படுத்தவோ மின்கட்டணத்தை அதிகரிக்கவோ இடமளிக்கப் போவதில்லை என மின்சக்தி எரிசக்தி மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஆறு மாத காலத்தினுள் மின்சார சபையை தலைசிறந்த நிறுவனமாக மாற்றுவதோடு ஏப்ரல் மாதத்தில் சகல பிரதேசங்களிலும் பாவனையாளர் பிரிவுகளை ஆரம்பிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தலங்கம பாவனையாளர் சேவை அலுவலக திறப்பு விழாவின் போது கருத்து வௌியிட்ட அவர் ​மேலும் குறிப்பிட்டதாவது,

நஷ்டத்தை இலாபமாக மாற்றுவதற்காகவே மின்சார சபையை நவீனமயப்படுத்தி வருகிறோம். இந்த வருட மின்சார சபையின் நஷ்டம் 8000 கோடிகளாகும். இது மகாவலி திட்டமொன்றை உருவாக்குவதற்கு செலவாகும் தொகையாகும். அரசியல்வாதிகள் உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்காதது தான் இந்த பிரச்சினை பூதகரமாக காரணமாக அமைந்தது.

நாம் மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது. அதற்கு இடமளிக்க மாட்டேன். தனியார் மயப்படுத்தவும் மாட்டோம். மின்உற்பத்தி செலவை குறைத்தால் எமக்கு அதன் பயனை பாவனையாளர்களுக்கு வழங்க முடியும். பூச்சியம் முதல் 120 அலகுகள் வரையான பாவனையாளர்கள் மற்றும் மதஸ்தலங்கள், அரச நிறுவனங்கள் என்பவற்றுக்கான மின்விநியோகத்தின் மூலமே நஷ்டம் ஏற்படுகிறது.

65 இலட்சமாக இருக்கும் எமது பாவனையாளர் தொகை வருடாந்தம் 6 முதல் 7 வீதத்தினால் உயர்வடைகிறது. மின்சார சபைக்கு ஏகபோக உரிமை இருக்கிறது. மின்சார சபை தவிர பாவனையாளர்களுக்கு வேறு மாற்றுவழி கிடையாது. இந்த நிலையை மாற்றி செயற்திறன் மிக்க நிறுவனமாக இதனை மாற்ற வேண்டும் என்றார்.

இதே வேளை, மின்சக்தி எரிசக்தி அமைச்சின் கீழ் வரும் சகல நிறுவனங்களுக்கும் புதிய தலைவர்களும் பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Thu, 01/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை