மூன்று மாதங்களில் கிரிக்கெட்டை மீளக் கட்டி​ெயழுப்புவோம்

ஜயந்த தர்மதாச

ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும், பின்னடைவையும், அழிவையும் சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட்டை மிக விரைவில் மீளக் கட்டியெழுப்புவதற்கும் தான் உள்ளிட்ட தரப்பினர் இம்முறை கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்கு களமிறங்கியதாக இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவரும், இம்முறை தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற முக்கிய வேட்பாளர்களில் ஒருவருமான ஜயந்த தர்மதாச தெரிவித்தார்.

இம்முறை இலங்கை கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான இரு தரப்பினரும் தமது தேர்தல் பிரச்சாரங்களை (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருந்ததுடன், அங்கு இரு சாராரும் தமது எதிர்த்தரப்பு வேட்பாளர்களுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2018 முதல் 2021 வரையான 4 வருட காலப்பகுதிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த 17ஆம் திகதி அறிவித்திருந்தது. இந்த நிலையில், இலங்கை நிறுவனத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற ஜயந்த தர்மதாச மற்றும் கே. மதிவாணன் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் உள்ள நவலோக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஜயந்த தர்மதாச கருத்து வெளியிடுகையில், இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை சீர்குலைத்தது யார் என்பது பற்றி புதிதாக சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் யார் என்பது பற்றி முழு நாட்டு மக்களும் நன்கு அறிவர். கிரிக்கெட் கழக உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இம்முறை தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தீர்மானித்தேன். நாங்கள் நிர்வாகத்துக்கு வந்த மூன்று மாதங்களில் அழிவுக்குள்ளான கிரிக்கெட் விளையாட்டை மீளக் கட்டியெழுப்புவோம் அதற்கு எம்மிடம் சிறந்த திட்டங்கள் உள்ளன. அதேபோல ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களை விரட்டியத்து விட்டு தூய்மையான நிர்வாகமொன்றை முன்னெடுக்கவே நாங்கள் வந்துள்ளோம். ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நிர்வாகம் தேவையானால் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

உண்மையில் கடந்த காலங்களில் நிர்வாகம் ஒன்று நடக்கவில்லை. என்னுடைய நிர்வாகத்தின் கீழ் தான் இலங்கை அணி, ரி-20 உலகக் கிண்ணத்தையும், ஆசிய கிண்ணத்தையும் கைப்பற்றியது. அதன்பிறகுதான் இலங்கை அணி பின்னடைவை நோக்கிச் சென்றது. முன்னாள் நிர்வாகிகளுக்கு கிரிக்கெட் அல்ல பணம் தான் தேவை. அந்தப் பணத்துக்காகவும், தனது தன்மானத்தை பாதுகாக்கவும் ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு போக முடியாது என தெரிவித்தார். ஆனால் எங்களுக்கு இந்நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதே பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. எனவே இம்முறை தேர்தலில் எனக்கு 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

பீ.எப் மொஹமட்

Tue, 01/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை