ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டிக்கு யாழ். முஸ்லிம் யுனைடெட் அணி தகுதி

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால் புத்தளம் நகரில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தொடராக நடாத்தப்பட்டு வந்த ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில், இறுதி போட்டியில் விளையாடும் பொருட்டு புத்தளம் நகரின் பிரபல அணியான யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி தகுதி பெற்றுள்ளது.

புத்தளம் நகரின் மற்றுமொரு பிரபல அணியான லிவர்பூல் அணியினை 02 : 01 கோல்களினால் வெற்றி கொண்டதன் மூலமே யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி இறுதி சுற்றுக்குள் பிரவேசித்துள்ளது.

இந்த பரபரப்பான முதலாவது அரை இறுதி ஆட்டம் வெள்ளிகிழமை (11) மாலை புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றிருந்தன. எனினும் இரண்டாம் பாதியில் போட்டி நிறைவு பெற இருந்த தறுவாயில் யாழ் முஸ்லிம் யுனைடெட் அணி பெற்றுக்கொண்ட இரண்டாவது கோலினால் அவ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

கால்பந்தாட்ட லீக்கின் இந்த தொடருக்கான புதிய சட்ட விதிகளின் பிரகாரம், முதல் அரை இறுதியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் அதேவேளை தோல்வி அடையும் அணி வெளியேறாமல் கிடப்பில் வைக்கப்படும். நீண்ட ஒரு தொடரில் கூடிய புள்ளிகளை பெற்ற ஒரு அணி உடனடியாக வெளியேற விடா வண்ணமே இவ்வாறு கிடப்பில் வைக்கப்பட சட்ட யாப்பு இயற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் அரை இறுதியில் தோல்வியுற்ற லிவர்பூல் அணி தொடரின் இரண்டாவது அரை இறுதிக்காக கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்றின் புள்ளிகள் அடிப்படையிலான தொடரில் மூன்றாம் நான்காம் நிலைகளை பெற்ற விம்பிள்டன் மற்றும் நியூ ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையில் அடுத்த போட்டி இடம்பெறும். இந்த போட்டி கால் இறுதி போட்டியாகவே கருதப்படும். இதில் வெற்றி பெறும் அணி கிடப்பில் வைக்கப்பட்ட்டுள்ள லிவர்பூல் அணியுடன் இரண்டாவது அரை இறுதி போட்டியில் மோதி அதில் வெற்றி பெறும் அணியே ஏற்கனவே இறுதி போட்டிக்கு தயாராக உள்ள யாழ் முஸ்லிம் யுனைடெட் அணியுடன் இறுதி போட்டியில் மோதவுள்ளது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் புள்ளிகள் அடிப்படையிலான முதல் சுற்றில் புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் 10 அணிகள் பங்கேற்றிருந்தன. மொத்தம் 45 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய 09 அணிகளுடனும் 09 போட்டிகளில் கலந்து கொண்டன.

இரண்டாம் சுற்றான விலகல் சுற்றுக்கு லிவர்பூல் 24 புள்ளிகளுடன் முதல் நிலைக்கும், யாழ் முஸ்லிம் யுனைடெட் 22 புள்ளிகளுடன் இரண்டாம் நிலைக்கும், விம்பிள்டன் 22 புள்ளிகளுடன் மூன்றாம் நிலைக்கும், நியூ ஸ்டார்ஸ் 18 புள்ளிகளுடன் நான்காம் நிலைக்கும் தெரிவாகி இருந்தன.

இந்த போட்டி தொடருக்கு புத்தளம் ட்ரகன்ஸ் கிரிக்ெகட் கழகத்தின் உரிமையாளர் முஹம்மது ரிஸ்பாக் பூரண அனுசரணை வழங்கியுள்ளார். மிக நீண்ட கால தொடரான இந்த போட்டி தொடர் சுமார் 05 விலகல் சுற்றுக்களை நடாத்தி முடிக்கும் காலத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் மற்றும் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் ஆகியோர், இந்த தொடரில் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பல சலுகைகளை வழங்கும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

புத்தளம் தினகரன் நிருபர்

 

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை