அனர்த்தங்களை முன்னறிவிப்பதற்கான விஞ்ஞான ஆய்வுகள் பற்றி சிந்திக்க வேண்டும்

அனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு முயற்சிகளுக்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் பற்றி நாம் இத்தருணத்தில் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மொறட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்கள் இணைந்து சினமன் லேக் ஹோட்டலில் இன்று (15) நடாத்திய சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான திறன் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் வழிகோலும் முகமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் இங்கிலாந்து, சுவீடன், லித்துவேனியா, எஸ்ரோனியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து முதலிய நாடுகள் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் ஐரோப்பிய ஆசிய ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்திருக்கும் “எஸ்சேன்ட் திருவிழா – 2019” எனும் ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.

பல பல்கலைக்கழகங்கள் ஒன்றினைந்து நடாத்தும் அனர்த்த முகாமைத்துவ ஆளுமை விருத்தி மற்றும் புத்தாக்கம் தொடர்பான சர்வதேச மகாநாடு மிகவும் பயனுறுதி வாய்ந்ததாகும். இம்முயற்சியானது தகவல்களை வழங்குவது மட்டுமன்றி, இதுதொடர்பான அறிவூட்டலில் ஈடுபடுவதும் மற்றும் திறன் அபிவிருத்தி, தலைமைத்துவம் முதலான பயிற்சிகளை வழங்குதல் என்பனவற்றில் பரஸ்பரம் உதவும் நிலையில் அமைந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி மாநாடானது எவ்வித சந்தேகத்துக்கிடமற்ற முறையில் உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேசத்திலும் பயன்தரக்கூடிய ஒரு முயற்சியாகும். அனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு முயற்சிகளுக்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் பற்றி நாம் இத்தருணத்தில் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் காலநிலை, அனர்த்தங்கள் மற்றும் சவால்கள் என்பனவற்றில் முன்னறிவிப்புச் செய்யும் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்குவது முக்கியமானதாகும். இவற்றினை கையாள்வதற்கு அனர்த்த அபாயங்களை குறைப்பது தொடர்பான கல்விசார் ஆய்வுகளில் பல்கலைக்கழகங்கள் உற்சாகத்துடன் ஈடுபடுவது பெரிதும் போற்றத்தக்க முயற்சியாகும் என்றார்.

Wed, 01/16/2019 - 13:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை