போதைவஸ்து கடத்தும் வெளிநாட்டு கேடிகள் ஐவர் கைது

பங்களாதேஷ் இராணுவம் அதிரடி

நாட்டின் சரித்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைவஸ்து தொகையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவரை பங்களாதேஷ் துரித செயற்பாட்டு படையணி கடந்த திங்கட்கிழமை கைது செய்துள்ளது. வெவ்வேறு முற்றுகைகளின் போது கைது செய்யப்பட்ட இவர்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட ஐவரில் மூவர் பெண்களாவர். சர்வதேச போதைவஸ்து கடத்தலுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப் படும் இவர்களைப் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதேநேரம் இந்நடவடிக்கைகள்எவ்வாறு அமைந்தன என்பது தொடர்பாக  பங்களாதேஷின் துரித செயற்பாட்டு படையணி நேற்று ஊடக மாநாடொன்றை நடத்தவிருந்தது. 

இலங்கை பொலிஸார் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி மேற்கொண்ட விசேட முற்றுகையின் போது கல்கிசை டெம்ப்லர்ஸ் வீதியில் உள்ள வீட்டுத் தொகுதியொன்றில் இருந்து 272கிலோ ஹெரோயினும் 5கிலோ கொக்கேய்னும் கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி 2.4பில்லியன் ரூபாவுக்கு அதிகமானதென மதிப்பிடப்பட்டது.

இந்த போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இலங்கை பொலிஸார் பங்களாதேஷ் பொலிஸாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லதீப் தினகரனுக்குத் தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் பங்களாதேஷிடம் கேட்டதற்கிணங்க விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கையில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் எம். ரியாஸ் ஹமீதுல்லா உறுதியளித்திருந்தார். 

ஜனவரி 5ம் திகதி டாக்கா வீடொன்றில் இருந்து சொய்ஸ் ரஹ்மான் என்பவரை பங்களாதேஷின் போதைவஸ்து கட்டுப்பாட்டு திணைக்களம் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தது.

கொழும்பில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கிணங்கவே பங்களாதேஷில்  மூன்று பெண்களையும் கைது செய்ய முடிந்ததாகக் கூறப்படுகிறது. கொழும்புக்குள் போதைவஸ்தை கடத்தி வருவதற்கு இந்த பெண்களின் பங்களிப்பு பெரும் துணையாக இருந்ததாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

பங்களாதேஷின் பொகுரா என்ற இடத்தை சேர்ந்த மொஹமட் ஜமாலுதீன் என்பவரும் ஜொய்புர்ஹத் என்ற இடத்தைச் சேர்ந்த ரபியுல் இஸ்லாம் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்ட ஆண்களாவர். இவர்கள் கடந்த டிசம்பர் 23ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளனர்.

இச் சந்தேக நபர்கள் இருவரும், கல்கிசை டெம்லர்ஸ் வீதியில் உள்ள வீட்டுத் தொகுதியின் நான்காவது மாடியில் இருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து  மேற்கொள்ளப்பட்ட முற்றுகையில் 9கிலோ ஹெரொயின் பிடிபட்டது. இவை கேக் பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு பயணப்பையில் மறைத்து வைக்கப்ப ட்டிருந்தன. சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது கேட் ஒன்றின் ரிமோட் கட்டுப்பாட்டு கருவி ஒன்றும் சாவிக் கொத்தும் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டன. குறிப்பிட்ட ரிமோட் கட்டுப்பாட்டு மேற்கூறிய கட்டிடத்துக்கு சொந்தமானது அல்ல என்பது தெரியவந்தது. லேதிக விசாரணையில் கௌடானா  வீதியிலுள்ள வீடொன்றில் ஹெரோயின் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேக நபர்கள் கூறினர். இந்த வீட்டில் இருந்தே நாடு முழுவதும் ஹெரோயின் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த டிசம்பர் 15ம் திகதி சுர்காமொனி என்ற பங்களாதேஷ் பெண் மற்றொரு கேக் பெட்டியுடன் கைது செய்யப்பட்டார். அப்பெட்டியில் ஒருகிலோ ஹெரோயின் இருந்தது. அந்தப் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்படி பெண் இரத்மலானையில் வாடகைக்கு பெற்றிருந்த வீட்டைப்பற்றித் தெரிய வந்ததும் அங்கு நடாத்தப்பட்ட தேடுதலில் 31கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

ஒருசில அடையாளங்களின் அடிப்படையில் மேற்கூறிய அனைத்து இடங்களிலும் கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து ஹெரோயின் வகைகளும் ஒரே ஹெரோயின் தொகுதியில் இருந்தே பெறப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குணசேகர தெரிவித்தார்.

Wed, 01/30/2019 - 08:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை