அதிகாரப் பகிர்வு விடயத்தில் நாங்கள் தாமதித்துவிட்டோம்

சுதந்திரமடைந்தபோது அதிகாரங்கள் பகிரப்படாமையே நாடு தற்பொழுது இந்தளவு மோசமான பிரச்சினைக்கு முகங்கொடுக்கப் பிரதான காரணமாகும் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

தற்பொழுது கிடைக்கப்பெற்றிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு மேலும் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அரசியலமைப்பு சபையில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபை முதல்வர் இந்த அழைப்பை விடுத்தார். நாடு சுதந்திரமடைந்த பின்னர் முதல் தடவையாக அரசியலமைப்பு செயற்பாட்டில் தமிழ் அரசியல் கட்சி பங்காளியாக இணைந்துள்ளது. இதற்கு முன்னர் அவ்வாறான நிலையொன்று காணப்படவில்லை. 72ஆம் ஆண்டு மற்றும் 78ஆம் ஆண்டில் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளை தமிழ் அரசியல் கட்சிகள் புறக்கணித்தன.

எனினும், தற்போதைய அரசியலமைப்பு தயாரிப்புப் பணிகளில் தமிழ் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் இந்தளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது. பல மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் சுதந்திரம் கிடைத்தபோது மாகாணங்களுக்கிடையில் அதிகாரங்கள் பகிரப்பட்டமையாலேயே நாடு ஒற்றுமையாக இருக்கிறது. இலங்கையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என முதன் முதலில் வலியுறுத்தியவர்கள் கண்டி சிங்களத் தலைவர்களாவர். சோல்பரி பிரபு மற்றும் டொனமூர் பிரபு ஆகியோர் தலைமையிலான ஆணைக்குழுக்களின் முன்னால் அதிகாரப் பகிர்வு பற்றி கண்டி தலைவர்கள் கூறியிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரப் பகிர்வு விடயத்தில் நாங்கள் அதிகமாக தாமதித்துவிட்டோம். நாங்கள் தற்போது யோசனையையே முன்வைத்துள்ளோம். அரசியலமைப்பு யோசனையில் ஒவ்வொரு சரத்துக்கும் மாற்றுக்கருத்து உண்டு. நாங்கள் பேசி அதனை செய்வோம். மாற்று சரத்துக்கள் தொடர்பாக பேசி ஏன் இறுதி சரத்தை தயாரிக்க முடியாது என்றும் கேள்வியெழுப்பினார்.

சுதந்திரத்திற்கு பின்னரே சமஷ்டி தொடர்பான பேச்சுக்கள் எழுந்துள்ளன. அப்போது முதல் மொழி உரிமையை கொடுத்தோமா? அதனை கொடுக்காமையினாலேயே பாரிய பிரச்சினைகள் உருவாகியிருந்தன.

இந்நிலையில் இப்போதாவது அதனை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கையெடுப்போம் என அவர் தெரிவித்தார்.

 ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Sat, 01/12/2019 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை