யெமனில் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பும் உணவை கிளர்ச்சியாளர்கள் திருடுவதாக குற்றச்சாட்டு

யெமனில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் உணவை தடுத்திடும் மற்றும் பாதை மாற்றிடும் செயலை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நிறுத்திட வேண்டுமென உலக உணவு திட்ட அமைப்பு கோரியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் யெமன் தலைநகர் சானாவில் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவை இன்னமும் பெறவில்லை என்று கண்டறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

உணவு விநியோக மையங்களில் இருந்து அதற்கு உரிய வாகனங்கள் அகற்றப்பட்டு, அங்கிருக்கும் உணவு பொருட்கள் வெளிச்சந்தைக்கு அனுப்பப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது. 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக எதிர்வினையாற்றாத ஹூத்தி போராளிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் உணவினை தாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.  

கிட்டத்தட்ட 2 கோடி பேர் யெமனில் உணவு பஞ்சத்தால் தவிப்பதாகவும், அதில் ஒரு கோடி பேருக்கு தாங்கள் எப்போது அடுத்த வேளை உணவை உண்ண போகிறோம் என்று தெரியாது என ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது. 

யெமனில் கிட்டத்தட்ட 50 இலட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு முன்னர் எச்சரித்தமை குறிப்பிட்டத்தக்கது. 

கடந்த 2015ஆம் ஆண்டில், ஹூத்தி அமைப்பினர் நாட்டின் மேற்கு பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டதால் யெமன் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பி செல்ல நேர்ந்தது. 

இதனைத் தொடர்ந்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி அந்நாட்டின் விவாகரங்களில் தலையிட, இது இரு தரப்புக்கும் இடையேயான மோதலை அதிகரித்தது.    

Wed, 01/02/2019 - 12:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை