ஐ.ரி.என் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு

சுயாதீன தொலைக்கட்சி நிறுவனத்தில் (ஐ.ரி.என்) ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை சமரசம் செய்யப்பட்டிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் நேற்று (09) தெரிவித்தார்.

நிர்வாக சபைக்கு எதிராக போராட்டம் நடத்திய ஊழியர்களுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சுயாதீன தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைவர், ஜனாதிபதியின் ஆலோசகர், தனது ஊடக செயலாளர் ஆகியோர் நடந்திய பேச்சுவார்த்தையால் இக்குழப்பநிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார். ஐ.ரி.என் நிறுவனத்தின் பணியாளர்கள் நிர்வாகத்துக்கு எதிராக ஆரம்பித்த போராட்டம் மற்றும் அதனை அடக்குவதற்கு பொலிஸார் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் அநுரகுமார திசாநாயக்க எம்பி நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டாறு தெரிவித்தார்.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் தொலைக்காட்சி நிறுவனத்தின் அன்றாட வேலைகளுக்குத் தடங்கல்களை ஏற்படுத்தியிருந்ததுடன், நிறுவனத்தின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தினர். அரசாங்கத்தின் பிரசாரங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் அரச ஊடகமாகவும், அரசாங்கத்தில் இருந்தவர்களால் சூறையாடப் படும் நிறுவனமாகவும் ஐ.ரி.என் நிறுவனம் காணப்பட்டது. எனினும், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏனைய நிறுவனங்களுக்குப் போட்டியாக அதனை முன்னேற்றியிருந்தோம். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் எவரையும் பழிவாங்கும் வகையிலோ அல்லது எவருக்கும் அநீதி இழைக்கும் வகையிலோ செயற்படவில்லை.

இவ்வாறான நிலையில் ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்க ஊடக நிறுவனங்களில் மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. புதிதாக நியமிக்கப் பட்டவர்கள்,அங்கிருந்த பழையவர்களைப் பழிவாங்கும் வகையில் நடந்துகொண்டனர். எனினும், கடந்த நான்கு வருடங்களில் நாம் அவ்வாறு செயற்படவில்லை. சட்டரீதியாக எமது அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்றதும் ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்த நிர்வாக சபை உறுப்பினர்களையே மீண்டும் நியமித்தோம். இவர்களுக்கு எதிராகவே பணியாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்துக் கொண்டு, அயலில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு முறையிட்டபோது சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்தபோதும் மேலிடத்திலிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து போராட்டக் காரர்கள் தமக்கு ஏற்ற வகையில் செயற்படுவதற்கு இடமளித்து விட்டு வெளியேறிச் சென்றுவிட்டனர். இது விடயத்தில் பொலிஸ் மாஅதிபர் தனது கடமையை சரிவர நிறைவேற்றாமை குறித்து கவலையடைகிறோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். மேலிடத்தின் பின்புலத்துடன் இவ்வாறான போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும் வேறு சக்திகளே இவர்களின் பின்னாலுள்ளமை புலனாகியுள்ளது என்றார்.

அதேநேரம், கடந்த வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப் பகுதியில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் நிலையான வங்கிக் கணக்கில் இருந்த 677 மில்லியன் ரூபா அன்றாட செலவீனங்களுக் குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைவிட துஷ்பிரயோகமான முறையில் எந்தவித செலவீனங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை போராட்டம் நடத்தும் தரப்பினருக்கு ஆதரவாக உள்ள பொது முகாமையாளரே எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் சுயாதீனமாக செயற்படுவதற்கும், ஊடகத்துறை சுதந்திரமாக செயற்படுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை