அமெரிக்காவுடனான உறவை துண்டித்தது வெனிசுவேலா

வெனிசுவேல எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்த அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை வெனிசுவேல தலைவர் நிகொலஸ் மடுரோ முறித்துக்கொண்டுள்ளார்.

அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டை விட்டு வெளியேற மடுரோ 72 மணிநேர அவகாசம் வழங்கியுள்ளார்.

குவைடோ கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தம்மை ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார். இந்நிலையில் “முன்னாள் ஜனாதிபதி மடுரோ” தொடர்ந்து அதிகாரம் அற்றவர் என்று அறிவித்த அமெரிக்கா, குவைடோவுக்கு இராணுவம் ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.

எனினும் இராணுவம் தொடர்ந்து மடுரோவுக்கு விசுவாசத்தை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மடுரோவின் பதவிக்காலத்தில் வெனிசுவேலாவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்திருப்பதோடு பணவீக்கம், மின்சாரம் துண்டிப்பு மற்றும் அடிப்படை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் மில்லியன் கணக்கான மக்கள் நாட்டை வட்டு வெளியேறி வருகின்றனர்.

வெனிசுவேல தேசிய மன்றத் தலைவராக உள்ள குவைடோவுக்கு ஆதரவு அளித்து கடந்த புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

“வெனிசுவேலா சுதந்திரம் பெறும் வரை” ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று ஆர்்ப்பாட்டக்காரர்கள் முன் அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து தனது வலது கையை உயர்த்திய குவைடோ, “நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதில் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவி ஏற்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டதோடு நிலைமாற்ற அரசை முன்னேடுப்பதாகவும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதாகவும் உறுதி அளித்தார்.

தற்போது மடுரோவுக்கு ஆதரவு அளித்து வரும் ஆயுதப் படைகள் அரசுக்கு கட்டுப்பட வேண்டாம் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெனிசுவேல நாட்டு தன்னார்வ தொண்டு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

தன்னை ஜனாதிபதியாக பிரகடனம் செய்த 35 வயதான குவைடோவின் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அங்கீகரித்திருந்தார்.

டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில் மடுரோ சட்டவிரோதமான ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “மடுரோ மற்றும் அவரது அரசுக்கு எதிராக வெனிசுவேல மக்கள் தைரியமாக குரலெழுப்புவதோடு, சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரத்தை கோருகின்றனர்” என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

வெனிசுவேல மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது என்று எச்சரித்திருக்கும் டிரம்ப் கடுமையான தடைகள் கொண்டுவரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இராணுவ நடவடிக்கை ஒன்றை கருத்தில் கொள்ளவில்லை என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட டிரம்ப், அனைத்து சாத்தியங்களுக்குமான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

குவைடோவுக்கு ஏனைய நாடுகளும் ஆதரவு அளிக்கும்படி டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் பிரேசில், கொலம்பியா, சிலி, பெரு, ஈக்வடோர், ஆர்ஜன்டீனா மற்றும் பரகுவே ஆகியு ஏழு தென் அமெரிக்க நாடுகளும் குவைடோ சட்டபூர்வ ஜனாதிபதியென அங்கீகரித்துள்ளன.

கனடாவும் அவருக்கு ஆதரவை வெளியிட்டிருப்பதோடு ஐரோப்பிய ஒன்றியம் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எனினும் மெக்சிகோ, பொலிவியா மற்றும் கியூபா நாடுகள் மடுரோவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கடந்த புதன்கிழமை இரவு உரை நிகழ்த்திய ஜனாதிபதி மடுரோ, அமெரிக்காவுடன் இணைந்து எதிர்க்கட்சினர் ஆட்சி கவிழ்ப்பு சதிப்புரட்சி ஒன்றுக்கு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். “மக்கள் இந்த பூமியை பாதுகாக்க முன்வர வேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாதத்தில் மடுரோ ஜனாதிபதி பதவியில் 2ஆவது முறையாக பதவியேற்ற பின்னர், குவைடோ தற்போதைய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எதிர்க்கட்சி புறக்கணித்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட தேர்தலில், நிகொலஸ் மடுரோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச நாடுகள் இதனை கண்டித்திருந்தன.

வெனிசுவேலாவில் நீடிக்கும் பதங்களிடையே மடுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்துள்ளது.

ஜனாதிபதி மடுரோவுக்கு எதிராக, இராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை மடுரோவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளுர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை