குடும்பத்தை விட்டு வந்த சவூதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து

தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி வந்து பாங்கொக் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற மறுத்து வந்த சவூதி அரேபிய பெண்ணுக்கு ஐ.நா அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இஸ்லாத்தை துறந்ததால் தனது குடும்பத்தினரால் கொல்லப்படுவேன் என்று 18 வயது ரஹாப் முஹமது அல் குனூன் என்ற அந்த யுவதி அச்சம் வெளியிட்டிருந்தார்.

அந்த யுவதியை அவுஸ்திரேலியாவில் மீளக்குடியமர்த்துவது குறித்து ஐ.நா அகதிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. “இந்த பரிந்துரையை வழக்கம்போல் கருத்தில்கொள்ளப்படும்” என்று அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுருக்கமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு ட்வீட் மூலமாக அவர் நான்கு நாடுகளில் தஞ்சம் கோரினார். இன்னொரு ட்வீட்டில் கனடா தனக்கு தஞ்சம் வழங்கவேண்டும் என விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

“ஐ.நாவின் அகதிகள் முகாம் அவரது கோரிக்கையை ஏற்று உரிய செயல்முறைகளை முடித்தால், அல் குனூன் மனித நேய அடிப்படையில் விசா தருமாறு எந்தவொரு விண்ணப்பத்தை தந்தாலும் அதை கவனமாக பரிசீலிப்போம்” என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் சூசகமாக குறிப்பிட்டுள்ளனர்.

அல் குனூனின் தந்தை மற்றும் சகோதரர் தாய்லாந்து சென்றிருக்கும் நிலையில் அவர்களை சந்திக்க அந்த யுவதி மறுத்துள்ளார். இவரது தந்தை சவூதி வடக்கு மாகாண நகரான அல் சுலைமியின் ஆளுநராக உள்ளார்.

இளம் பெண்ணின் பாதுகாப்பு குறித்தே கவனம் செலுத்துவதாக அல் குனூன் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

“என் வாழ்க்கை அபாய கட்டத்தில் உள்ளது” என முஹமது அல் குனூன் ரோய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். “எனது குடும்பம் கொன்றுவிடுவதாக என்னை மிரட்டியது” என்றார்.

இந்த விவகாரத்தின் ஒவ்வொரு திருப்பங்கள் குறித்தும் ட்விட்டரில் அவர் பகிர்ந்து கொண்டார். இதனால் உலகம் முழுவதும் சமூக வலைதள பயனர்கள் இவ்விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வந்தனர். ஒன்றரை நாட்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் அவரது ட்விட்டர் கணக்கை பின்தொடர்ந்துள்ளனர்.

அவரை மீண்டும் சொந்த நாட்டுக்கு கொண்டுவர சவூதி அரசு முயற்சி எடுத்துவருகிறது எனும் செய்தியை தாய்லாந்தில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் மறுத்துள்ளது.

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை