அரசாங்கத்தின் எவ்வித தலையீடுமின்றி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதோ அல்லது அரசாங்கத்தினதோ எந்தவித அழுத்தமுமின்றியே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு இணங்கவே மேற்படி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் தொழில் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ. விமலவீரவிடம் ஒப்படைத்த பின்பு இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பில் அரசாங்கத்திற்கோ தொழிற்சங்கங்களுக்கோ, முதலாளிமார் சம்மேளனத்துக்கோ இணக்கப்பாடொன்றுக்கு வரமுடியாமல் போனதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் கடந்த வாரத்தில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எமக்கு சில வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

மேற்படி விடயத்தில் தலையிட்டு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரப்பட்டது. இதற்கிணங்க கடந்த வெள்ளிக்கிழமை பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவை இணைத்துக் கொண்டு மேற்படிப் பேச்சுவார்த்தையில் நடுநிலை வகித்துச் செயற்பட்டோம். சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அமைச்சுக்கு அழைத்திருந்தோம். அதன்போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்தது. அதற்கிணங்கவே நேற்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனை வர்த்தமானியில் வெளியிடும் அதிகாரம் தொழில் ஆணையாளருக்கே உள்ளதால் அவரிடம் குறித்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை