சுமந்திரனின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு பாதகம்

பெப்ரவரி 4 க்கு முன் அரசியலமைப்புக்கான  நகல் கொண்டு வந்தால் சு.க எதிர்க்கும்

புதிய அரசியலமைப்பை நேரடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சுமந்திரன் எம்.பி முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்கு பாதகமாக அமையுமென சு.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.

சுமந்திரன் எம்.பி கூறியுள்ளதன்படி பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படுமாயின் அதனை சுதந்திரக் கட்சி தோற்கடிப்பது உறுதியென்றும் அவர் கூறினார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தயாசிறி எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்."இச்சந்தர்ப்பத்தில் நாம் சுமந்திரன் எம்.பியை தமிழ் மக்களிலிருந்து வேறு பிரித்தே பார்க்க வேண்டியுள்ளது. அவர் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றார். தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய அதிகார பகிர்வையும் அவர் இல்லாமல் செய்ய பார்க்கின்றார்.

தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களை பாதுகாக்க நாம் தயார் என்கின்றபோதும் சுமந்திரனின் அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாரில்லை," என்றும் தயாசிறி எம்.பி விளக்கமளித்தார்.

பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். இது மிகவும் பிழையானதொரு நடைமுறை. புதிய அரசியலமைப்புக்கான வரைபை தயாரிக்கும் பொறுப்பு மட்டுமே சுமந்திரன் எம்.பிக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர அவரால் தான் நினைத்தவாறு அதனை நேரடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது. புதிய அரசியலமைப்புக்கான வரைபு அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவிடம் முன்வைக்கப்பட வேண்டும். அக்குழு முன்வைக்கும் அறிக்கையை பிரதமரே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்நடைமுறையை மீறி வரும் எந்தவொரு புதிய அரசியலமைப்பையும் சுதந்திரக் கட்சி தோற்கடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுமந்திரன் எம்.பியால் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்பது தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாகவும் தயாசிறி ஜயசேகர எம்.பி இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.

கூட்டமைப்பு இப்புதிய அரசியலமைப்பை அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதன் பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உடந்தையாக இருப்பதாகவும் கூறினார்.

அதன் காரணமாகவே ஐ.தே.க இதுவரை அது தொடர்பில் எவ்வித மறுப்பையும் வெளியிடவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

" முறைகேடாக கொண்டு வரும் புதிய அரசியலமைப்பை சுதந்திரக் கட்சி எப்படியும் தோற்கடிக்கும் என்பது கூட்டமைப்புக்கும் ஐ.தே.கவுக்கும் நன்கு தெரியும். அவ்வாறு இடம்பெற்றதும் அடிப்படைவாதிகளாக எம்மை தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டி தமிழர்களின் வாக்குகளை தம்பக்கம் சுவீகரிப்பதே அவர்களின் பிரதான திட்டம். ஆனால் சுதந்திரக் கட்சியில் அடிப்படைவாதம் இல்லை என்பதையும் சுமந்திரன் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக செய்யும் கபட நாடகமே இது என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், " என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்குவது சுமந்திரன் எம்.பியினதும் ஜயம்பதி எம்.பியினதும் வீட்டு ​வேலையல்ல. இது நாட்டின் பிரச்சினை.

புதிய அரசியலமைப்பை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அதனை இத்தனை அவசரமாக செய்ய முடியாது.

அனைத்தும் சரியான முறைப்படி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்," என்றும் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்

 

Fri, 01/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை