கிழக்கு மாகாண விளையாட்டு வீரர்கள் கௌரவிப்பு

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 44 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்த வீர, வீராங்கனைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

குறித்த கௌரவிப்பு நிகழ்வு கடந்த (28) வெள்ளிக்கிழமை திருகோணமலை கடற்படை கிழக்கு பிராந்தியத்திய அட்மிரல் வசந்த கருணாகொட மண்டபத்தில் இடம் பெற்றது.

மாகாண விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டாவின் வழிகாட்டலிலும் மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையிலும் நடைபெற்ற இவ் விருது வழங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளூநர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் அவரது பாரியார் தீப்தி போகொல்லாகம ஆகியோர்கள் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

தேசிய மட்ட விளையாட்டில் வெற்றியீட்டிய 67 வீர, வீராங்கனைகளும், 29 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.

இதில் 05 தங்கப்பதக்கங்கள், 06 வெள்ளிப் பதக்கங்கள், 15 வெண்கலப் பதக்கங்களை தேசிய விளையாட்டில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் தன்வசமாக்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூடைப் பந்து, கபடி,கிரிக்கெட், மல்யுத்தம், ஜூடோ உள்ளிட்ட 15 விளையாட்டுக்களில் திறமைகளை தேசிய மட்டம்,சர்வதேச மட்டம் என சாதனை படைத்த வீர வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டார்கள்.

கிழக்கு ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் அவரது பாரியார் தீப்தி போகொல்லாகம ஆகியோர்களுக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸால் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. திணைக்களத் தலைவர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள்,அரச உயரதிகாரிகள் ,வீர, வீராங்கனைகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்,

Sat, 01/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை