95 கிலோ ஹெரோயின்; ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கொள்ளுபிட்டியில் நேற்று 95.88 கிலோ ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று வெளிநாட்டவர் உட்பட ஐந்து பேரையும் ஜனவரி 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்த விசாரிக்க பொலிசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இச்சம்பவத்தில் இரண்டு அமெரிக்கப் பிரஜைகளும் ஆப்கானிஸ்தான் பிரஜையொருவரும், ஹிக்கடுவையைச் சேர்ந்தஇருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போதைப் பொருளின் பெறுமதி சுமார் 1,080 மில்லியன் ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி நவீன வர்த்தக நிலையமொன்றுக்குள் 1 கிலோ 62 கிராம் ஹெரோயினுடன்இரண்டு பேர் நேற்று கைதாகினர்.

இவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள அதி சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பின் முதலாம் மாடியில் அமைந்துள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது நான்கு பயணப்பொதிகளில் 94.26 கிலோ ஹெரோயின் 92 பொதிகளிலாக பயணப்பொதிகளில் அடுக்கிவைத்திருப்பது கண்டுபிடித்தனர். 

இப் போதைப் பொருளுடன் மேலும் மூன்று பேர் இங்கு கைது செய்யப்பட்டனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நேற்று இப்போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுள் இரண்டு அமெரிக்கப் பிரஜைகளும் 29 மற்றும் 43 வயதுடையவர்களென்றும் ஆப்கானிஸ்தான் பிரஜை 45 வயதுடையவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் இருவரும் ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான இந்திரஜித் பத்மகுமார என்றும் 39 வயதான சமிந்த திமுத்து சமரசிங்க என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.    

(லக்ஷ்மி பரசுராமன்)  

Wed, 01/23/2019 - 14:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை