தோட்ட தொழிலாளருக்கு 800ரூபாவது பெற்று கொடுக்க வேண்டும்

மத்திய மாகாண ஆளுநர் 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் 800ரூபா அடிப்படை சம்பளத்தையாவது பெற்று கொடுக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் அவதானம் செலுத்த வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.  

மத்திய மாகாணத்திற்கு புதிய ஆளுநராக நியமனம் பெற்ற மைத்திரி குணரத்னவுக்கு ஹற்றன் பிரதேச வரவேற்பு நிகழ்வு ஹற்றன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந் நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் கிஷான் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், அக்கரபத்தனை பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் மேலும் உரையாற்றிய மத்திய மாகாண ஆளுநர்,

தோட்ட தொழிலாளர்களுக்கு தற்பொழுது வழங்கப்படுகின்ற 500ரூபா அடிப்படை சம்பளம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்த போதுமானதல்ல, அதனாலே தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்துக்காக போராட்டம் நடத்துகின்றனர்.ஆனால் ஆயிரம் ரூபா பெற்றுத் தருவதாக கூறியவர்களும் இன்று மௌனம் காத்து வருகின்றனர்.சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்திருந்தும்.ஏன் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முடியாது. வெள்ளைக் காரர்கள் காலப் பகுதியில் தோட்ட பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் சிறப்பாக இயங்கின. ஆனால் தற்பொழுது மலையகத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கு நாம் ஒரு தீர்வினை காண வேண்டும்.

ஒரு தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டால் 150 தொழிலாளர்களுக்கு தொழில் இழக்கப்படுகிறது. அதேபோல் மலையகத்தில் 10 தொழிற்சாலைகள் மூடப்பட்டால் 1500 தொழிலாளர்கள் தொழில் இழக்கின்றனர். எனவே மலைகத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் ஆளுநராக பதவி ஏற்றது அரசியல் செய்வதற்கு அல்ல. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் பதவி ஏற்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(நோட்டன் பிரிஜ் நிருபர்) 

Tue, 01/15/2019 - 13:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை