தென் கிழக்கு பல்கலை மாணவர் 8 பேருக்கும் பெப் 05 வரை விளக்கமறியல்

Rizwan Segu Mohideen
தென் கிழக்கு பல்கலை மாணவர் 8 பேருக்கும் பெப் 05 வரை விளக்கமறியல்-8 South Eastern University Students Remanded-Kiralagala Stupa

ஹொரவப்பொத்தானை, கிரலாகல தொல்பொருள் வனப்பகுதியில் உள்ள தூபியின் மீது ஏறி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைதான 8 பேருக்கும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் 7 பேர் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டதோடு, இன்றைய தினம் (24) மேலும் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தொல்பொருள் திணைக்களத்தினால் நேற்று முன்தினம் (22) மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த 8 சந்தேகநபர்களும் இன்றைய தினம் (24) கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி 05 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கி.பி. 3 ஆம் நூற்றாண்டு கால தொல்பொருள் வரலாற்றைக் கொண்ட குறித்த தொல்பொருள் கட்டடம் மீது ஏறிய விடயம், தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மற்றும் அம்பாறை பிரதேசங்களைச் சேர்ந்த குறித்த மாணவர்கள், கடந்த வருடம் (2018) ஜனவரி மாதம் தங்களது விடுமுறையின்போது  ஹொரவப்பொத்தானை நகருக்கு அண்மித்த, கிரலாகலவிலுள்ள குறித்த பகுதி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு சென்றுள்ளனர். இதன்போது பல்வேறு இடங்களிலும் இவ்வாறு புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

குறித்த புகைப்படங்கள் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில் அவை தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியதை அடுத்து, இப்பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ளது.

இதேவேளை, தூபியின் மீது அதனை அவமதிக்கும் வகையில் நாம் ஏறவில்லை எனவும், குறித்த விடயம் தொடர்பில் தாங்கள் உரிய அறிவின்மை காரணமாகவும் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்மாணவர்கள் பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 01/24/2019 - 17:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை