கொழும்பு துறைமுகத்தில் நேற்றுடன் 70 இலட்சமாவது கொள்கலன் இறக்கம்

45 ஆண்டுகால வரலாற்றுச் சாதனை; துறைமுகத்தில் கொண்டாட்டம்

கொழும்பு துறைமுகம் இவ்வருடத்தில் நேற்றைய தினத்துடன் (31) 07 மில்லியன் கொள்கலன்களை இறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 1973ஆம் ஆண்டு இத்துறைமுகத்தில் முதலாவது கொள்கலன்கள் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பல தடைகளைக் கடந்து இவ்வரலாற்று சாதனை புரிந்தமை விசேட அம்சமாகும்.

இச்சாதனை கொண்டாட்ட நிகழ்வு நேற்று கொழும்பு துறைமுகத்தில் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஜயபாலு முனையத்தில் (JCT) துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில், அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்கவின் பங்குப்பற்றலுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜயபாலு முனையம் (JCT) சவுத் ஹேசியன் கேட்வே முனையம்(SAGT) மற்றும் கொழும்பு சர்வதேச கொள்கலன்கள் முனையத்தின் (CICT) உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.

2018ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. இவ்வாண்டில் (2018) கொழும்பு துறைமுகமானது உலகிலுள்ள தலைசிறந்த 30 துறைமுகங்களுள் முதலாம் இடத்தைப் பிடித்தது. சர்வதேச அல்பா லைனர் தரப்படுத்தலிற்கமைவாக கொழும்பு துறைமுகம் முதலாவது அரையாண்டில் 15.6% வளர்ச்சியை அடைந்தது. இக்காலப்பகுதியை கடந்த ஆண்டுடன் (2017) ஒப்பிடுகையில் இவ்வளர்ச்சி வேகம் அதிகமாகும். இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை மற்றும் சர்வதேச சமுத்திரவியல் வியாபார நடவடிக்கைகளில் (Maritime Ranking ) முதற்தர(01) துறைமுகமாக தரப்படுத்தப்பட்டமை ஆகியன கொழும்பு துறைமுகம் ஈட்டிக்கொண்ட விசேட வெற்றிகளாகும். ஆசிய ,ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு துறைமுகங்களை பின்தள்ளிவிட்டுக் கொழும்பு துறைமுகம் இம்மாபெரும் வெற்றியை ஈட்டியமை இத்துறைமுகத்தின் வளர்ச்சியை மென்மேலும் உறுதிப்படுத்துகின்றது.

Tue, 01/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை