சரத் என்.சில்வாவை 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவை எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமே முன்னாள் பிரதம நீதியரசரை எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை முன்னாள் பிரதம நீதியரசர் அவமதித்ததாக குற்றம்சாட்டி சிரேஷ்ட பேராசிரியர்களான சந்திரகுப்த தேனுவர, பேராசிரியர் ஹேவாவடுகே சிறில் மற்றும் பேராசிரியர் டொன் பிரிசாந்த குணவர்தன ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதிகளான விஜித் மலல்கொட, முர்து பெர்னான்டோ மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய மூவரும் முன்னாள் பிரதம நீதியரசரை எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டனர்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் திகதி மருதானை சந்தியில் நடைபெற்ற கூட்டத்தின்போது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா உச்ச நீதிமன்றத்தை கண்டனம் செய்யும் வகையில் அவமதித்து கருத்து வெளியிட்டிருப்பதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

எனினும் சரத் என்.சில்வா தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, எவ்வித அழைப்பும் விடுக்கப்படாத நிலையிலேயே முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என். சில்வா நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதாக நீதிபதிகள் குழாமிடம் நேற்று தெரிவித்தார்.

'இது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விடயம் என்பதால் இன்றே இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்' என சில்வா நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் ஜயசூரியவும் இவ்விசாரணையை இன்றே எடுத்துக் கொள்ளுமாறும் நேற்று நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

இவற்றை கருத்திற் கொண்ட நீதிபதிகள் குழாம் வெகு அண்மையிலேயே இவ் விசாரணையை எடுத்துக் கொள்ளும் நோக்கில் அதற்கான நாளை நியமித்தனர்.

மேலும் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக முன்னாள் பிரதம நீதியரசருக்கு அரசியலமைப்பின் 105 (3) சரத்துக்கமைய தண்டனை வழங்குமாறும் மனுதாரர்கள் தமது மனுவில் கேட்டுள்ளனர்.

இவ்வழக்கு முடிவுக்கு வரும் வரையில் உச்ச நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசும் வகையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடாதவாறு முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் ஒரு குழு பொதுத் தேர்தலை வலியுறுத்தி ஏற்பாடு செய்திருந்த 'ஜாதிக்க எக்கமுத்துவ' எனும் பொது மக்கள் கூட்டம் அண்மையில் மருதானையில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் மிகவும் தரக்குறைவான கருத்துக்களை முன்வைத்ததாக மனுதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை