ஓய்விற்குப் பிறகு முதற்தடவையாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஹேரத்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரத்துக்கான நான்கு போட்டிகள் (27) நிறைவுக்கு வந்தன.

இதில் தமிழ் யூனியன் கழகத்திற்கும், கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத்,ஓய்விற்குப் பிறகு பங்குகொண்ட முதலாவது உள்ளூர் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது மீள்வருகையை அட்டகாசமாக ஆரம்பித்திருந்தார்.

கட்டுநாயக்க மைதானத்தில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், இலங்கை அணியின் அனுபவ வீரர் தரங்க பரணவிதாரன பெற்றுக்கொண்ட இரட்டைச் சதத்தின் உதவியுடன் 405 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம், வனிந்து ஹசரங்கவின் அபார சதத்தினால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 324 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் தமிழ் யூனியன் அணிக்காக விளையாடிவரும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் 71 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார்.

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருடன் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற 40 வயதான ஹேரத், முதற்தடவையாக முதல்தரப் போட்டிகளில் களமிறங்கி தனது அபார பந்துவீச்சின் மூலம் மீண்டும் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடி வருகின்ற சிரேஷ்ட வீரர்களில் ஒருவராக விளங்குகின்ற ஹேரத், இதுவரை 268 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள ஹேரத் 1071 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதில் 69 தடவைகள் ஐந்து விக்கெட்டுக்களையும், பதினான்கு தடவைகள் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2014ஆம் ஆண்டு எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுமதியையும் அவர் நிலைநாட்டினார்.

இதனையடுத்து 81 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்நேற்றைய தேனீர் இடைவேளை வரை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி, 350 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி கொழும்பு கிரிக்கெட் கழகம் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

(பீ.எப் மொஹமட்)

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை