சண்முகா 5 முஸ்லிம் ஆசிரியைகளும் புதிய பாடசாலைகளுக்கு

RSM
சண்முகா 5 முஸ்லிம் ஆசிரியைகளும் புதிய பாடசாலைகளுக்கு-Trincomalee-Shanmuga-Habaya-Issue-5-Teachers-Transferred-Director-of-Education-Eastern-Province-M-K-M-Mansoor

"கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமையவே செயற்பட்டேன்"

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்வியமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூரின் தலையீட்டால் சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட்டிருக்கிறது.

மேற்படி கல்லூரியில் கற்பித்த 5 ஆசிரியைகளும் ஹபாயா ஆடை அணிந்து வரும் விவகாரம் கடந்த ஆண்டில் பிரச்சினையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் கிண்ணியா மற்றும் திருமலை சாஹிறா முஸ்லிம் வித்தியாலயங்களில் தற்காலிக இணைப்புச் செய்யப்பட்டனர்.

அவர்களது தற்காலிக இணைப்பு கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்ததை அடுத்து, இந்த ஆண்டின் முதல்தவணையுடன் அவர்கள் மீண்டும் சண்முகாவிற்கு திரும்ப வேண்டிய நிலையில், கடந்த ஜனவரி 02 ஆம் திகதி, பாடசாலையின் முதல்தவணை ஆரம்பமான தினத்தில் மீண்டும் சண்முகாவிற்குத் திரும்பினார்கள்.

அவ்வேளையில் சண்முகா பாடசாலை நிர்வாகம் மீண்டும் கிழக்கு மாகாணக் கல்விப்பணிமனைக்குச் சென்று தமது ஆட்சேபங்களைத் தெரிவித்ததோடு, போராட்டம் நடாத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

'இது தேசிய பாடசாலை எனவே மத்திய கல்வியமைச்சுதான் இதில் முடிவெடுக்க வேண்டும் அதுவரை பொறுமையாகவிருங்கள்' என கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், அவர்களிடம் கூறி அனுப்பி வைத்தார்.

இதேவேளை மாகாணக் கல்விப்பணிப்பாளர் இது தொடர்பில் கல்வி அமைச்சிற்கு அறிவித்ததை அடுத்து, கல்வியமைச்சிலிருந்து இது விடயம் தொடர்பாக மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைத்துள்ளனர். அதில் இரு வழிமுறைகள் மூலம் குறித்த ஆசிரியையகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கமுடியும் என்று கூறப்பட்டிருந்ததாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.

ஒன்று அவர்கள் மாகாணப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல விருப்பம் தெரிவித்தால்,  அவர்கள் விரும்பும் பாடசாலையில் இணைப்புச் செய்துவிட்டு தேசிய பாடசாலையிலிருந்து மாகாணப்பாடசாலைக்குச் செல்லும் படிவங்களை வழங்கி அதன்படி அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த இடமாற்றத்தை வழங்குதல்.

இரண்டு அவ்வாறு மாகாணப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில் மாகாணப் பாடசாலைகளுக்கு இணைப்புச் செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் சம்பந்தப்பட்ட 5 ஆசிரியையகளுக்கும், கல்வியமைச்சின் கடிதப்பிரகாரம் அவர்களது விருப்பங்களை கேட்டு கடிதங்களை அனுப்பிவைத்தார்.

அதற்கு அந்த 05 ஆசிரியைகளில் ஒருவர் மாகாணப் பாடசாலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்ததை அடுத்து, அவரது விருப்பப்படி, கிண்ணியாவிற்கு அவர் இணைக்கப்பட்டுள்ளார். அவர் முறைப்படி தேசிய மாகாண பாடசாலை இடமாற்ற படிவங்களை அதிபர், வலயக் கல்விப்பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு வழங்கும் பட்சத்தில் இடமாற்றம் வழங்கப்படும்.

ஏனைய 4 ஆசிரியைகளுள் ஒருவர் ஆரம்பநெறி ஆசிரியை, இரண்டாமவர் விசேடகல்வி ஆசிரியை, மூன்றாமவர் தகவல்தொழில்நுட்ப ஆசிரியை, நான்காமவர் இரண்டாம்மொழி ஆசிரியை ஆவர்.

இவர்கள் நால்வரும் ஏற்கனவே திருகோணமலை சாஹிரா மகா வித்தியாலயத்தில் இணைப்புச்செய்யப்பட்டிருந்தார். அங்கு ஆரம்பநெறி மற்றும் விசேட கல்வித்துறைக்கு வெற்றிடம்  காணப்பட்டதனால் அவர்களில் இருவர் அங்கு இணைப்புச் செய்யப்பட்டார்கள்.

தகவல்தொழில்நுட்ப ஆசிரியை மற்றும் இரண்டாம் மொழி ஆசிரியைக்கு வெற்றிடம் நிலவுகின்ற முஸ்லிம் பாடசாலைகளின் பட்டியலை திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளரிடம் கல்வித்திணைக்களம்  கோரியபோது அவர் இரு பாடசாலைகளை வழங்கினார்.

அதன் அடிப்படையில், நிலாவெளி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு தகவல்தொழில்நுட்ப ஆசிரியையும் குச்சவெளி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இரண்டாம் மொழி ஆசிரியையும் இணைப்புச் செய்யப்பட்டனர்.

அதன்படி இந்த 5 ஆசிரியைகளும் நாளை (21) திங்கட்கிழமை தத்தமது புதிய பாடசாலைகளில் கடமைகளைப் பொறுப்பேற்கவிருக்கின்றனர்.

இது தொடர்பில்  மேலும் தெரிவித்த கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர்,

'தேசிய பாடசாலைகளைப் பொறுத்தவரை நாம் இசுருபாயவின் முகவர்கள். இசுருபாய சொல்வதை நாம் செய்ய வேண்டும். அதை மீறும் அதிகாரம் எமக்கில்லை. பொங்கலுக்கு லீவு வழங்கும் அதிகாரமும் அப்படியே. தேசியபாடசாலைகளுக்கு நாம் லீவு வழங்கமுடியாது. ஆதலால்தான் ஆளுநரின் உத்தரவிற்கமைவாக மாகாணப்பாடசாலைகளுக்கு மாத்திரம் லீவு வழங்கினோம்.

அப்படியே சண்முகாவின் ஓர் உணர்வு ரீதியான பிரச்சினையைத் தவிர்க்கம் முகமாக மாணவர்  நலன் மற்றும் கல்விச்சமூக நலன்கருதி இசுருபாய ஒரு தீர்மானத்தை எடுத்து அனுப்பும் போது நாம் அதன்படி செயற்படவேண்டியது எமது கட்டாய கடமையாகும். நான் ஓர் அரசாங்க ஊழியன். இதில் சாதி இனமத பேதம் பார்க்கமுடியாது. அதைமீறவும் முடியாது. அதனைத்தான் செய்தேனே தவிர எனது விருப்பிற்கு எதையும் செய்யவில்லை. செய்யவும் முடியாது' என்றார்.

(காரைதீவு குறூப் நிருபர் சகா)

Sun, 01/20/2019 - 11:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை