பாராளுமன்றத்தில் தவறிழைத்த 59 எம்.பிக்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை

சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றே அடுத்த கட்டம்

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பான அறிக்கையை சபாநாயகர் ஆராய்ந்து வருவதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்ற பின்னர்  தேவையான நடவடிக்கைகளை அவர் எடுப்பாரென்றும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14,15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் சபாநாயகரிடம் கடந்த வாரம் அறிக்கை கையளிக்கப்பட்டது. இதில் 59 எம்.பிக்கள் தவறு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 54 ஐ.ம.சு.மு எம்.பிக்களும் 4 ஐ.தே.க எம்.பிக்களும் ஒரு ஜே.வி.பி எம்.பியும் அடங்குவதாக தெரிய வருகிறது.  

இதில் ஐ.ம.சு.மு எம்.பி ஒருவருக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அடுத்து பத்ம உதயசாந்த மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து ஆகியோரின் பெயர்கள் உள்ளதாகவும் நம்பகமாகத் தெரியவருகிறது.

சபாநாயகரின் ஒலிவாங்கியை உடைத்தது தொடர்பில் திலும் அமுனுகம மற்றும் ஆனந்த அலுத்கமகே மீதும் குடிநீர் போத்தலால் தாக்கியதாக மஹிந்தானந்த அளுத்கமகே மீதும் சபாநாயகரின் ஆசனத்தில் நீர் ஊற்றியதாக பிரசன்ன ரணவீர மீதும் குப்பை கூடையால் வீசித் தாக்கியதாக இந்திக அனுருத்த மீதும் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்ததாக அருந்திக பெர்ணாந்து மீதும் கத்தி போன்ற ஒன்றை எடுத்து வந்ததாக பாலித தேவரப்பெரும் மற்றும் ரஞ்ஜன் ராமநாயக்க மீதும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியது,பொலிஸாரை அச்சுறுத்தியது தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, பிரசன்ன ரணவீர,நிரோசன் பிரேமரத்ன ஆகியோர் மீதும் செங்கோல் மேசையை தள்ளியது தொடர்பில் நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் ரஞ்சித் த சொய்சா மீதும் எம்.பிக்கள் மீது திரவமொன்றை வீசி தாக்கியமை தொடர்பில் பத்ம உதயசாந்த மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  

குறித்த எம்.பிக்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வழக்கு தொடருமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

இது தொடர்பில் பிரதி சபாநாயகர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டதுடன் அந்த குழுவின் அறிக்கையிலேயே சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.  

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ,பல நூறு பேரிடம் வாக்குமூலம் பெற ​வேண்டும் எனவும் இதற்கு 3 மாத காலம் தேவை எனவும் பொலிஸார் கூறியிருந்தனர்.

ஆனால் அவசரமாக விசாரணையை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். பாராளுமன்ற வீடியோ பதிவுகளையும் ஊடக நிறுவனங்களின் நெறிப்படுத்தப்படாத வீடியோக்களையும் பெற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டது.  

தற்பொழுது சபாநாயகர் எமது அறிக்கையை ஆய்வு செய்து வருகிறார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகத்துடனும் கலந்துரையாடிய பின்னர் அவர் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவார். இவற்றுக்கு சிலகாலம் பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.(பா)   

(ஷம்ஸ் பாஹிம்)  

Mon, 01/28/2019 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை